Editorial / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தென் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரால் அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) வழிகாட்டலில், 2026 ஏப்ரல் 25ஆம் திகதி இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் 'ஹசித புத 4' (Hasitha Putha 4 / IMUL-A-0808 GLE) எனும் பல நாள் மீன்பிடி படகு கடலுக்குச் சென்றிருந்தது. இலங்கையிலிருந்து சுமார் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அதில் இருந்த மீனவர் ஒருவரின் கையில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவருக்குச் சிகிச்சை அளிக்க உதவுமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கடற்படை உடனடியாகச் செயற்பட்டது. தென் கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகு ஒன்று குறித்த கடற்பரப்பிற்கு விரைந்து அனுப்பப்பட்டது.
காயமடைந்த மீனவரைத் தமது படகிற்கு மாற்றிய கடற்படையினர், அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, அவர் மிக விரைவாக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டார். மேலதிகச் சிகிச்சைக்காக குறித்த மீனவர் 2026 ஏப்ரல் 25ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர் சந்திக்கும் மீனவர்களுக்கும் கடல்சார் சமூகத்தினருக்கும் உடனடி நிவாரணங்களை வழங்க, கொழும்பு கடற்படைத் தளத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் எப்போதும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .