2021 மே 06, வியாழக்கிழமை

’கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும்’

Niroshini   / 2021 மார்ச் 03 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய, மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட 10,588 பல்கலைக்கழக மாணவர்களுக்கமைய, பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில், இன்று (03) நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின் போதே,  பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாண்டில், 41,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக இம்முறை 10,588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கமைய, வைத்திய பீடங்களில் மாத்திரம் 479 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அது நான்கு புதிய வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு சமமாகும் என்றும் கூறினார்.

எனினும், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க கூடுதலாக சுமார் 5 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக இதுவரை வழங்கப்படும் நிதிக்கு மேலதிகமாக, இந்த கூடுதல் நிதியை  கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அறிவுறுத்தினார்.

அத்துடன், சம்பந்தப்பட்ட முறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும், பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க , பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் கூறினார்.

இதேவேளை,  இசெட் வெட்டுப்புள்ளி காரணமாக பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக  ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அதற்கான தீர்வாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு அவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தெரிவித்தார்.

இதனை கவனத்தில் கொண்ட   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அறிவுறுத்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .