Lenin Raj / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகக் கப்பம் பெறுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கட்சித் தலைவர்களுக்கான 27/2 நிலையியல் கட்டளையின் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கப்பம் பெறுகின்றார்.
அமைச்சர் தொடர்பில் அவதானமாகச் செயற்படுங்கள். அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்படலாம்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் சபையில் குறுக்கிட்ட அமைச்சர் சந்திரசேகர், "வட மாகாணத்தை எடுத்துக்கொண்டால் தற்போது சாணக்கியன் மற்றும் அவருக்கு ஆசானாகச் செயற்படும் சுமந்திரன் ஆகியோர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அதிகமாக நானே கருத்துக்களை முன்வைக்கின்றேன்.
அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுமாயின் நாடாளுமன்றத்திற்கு அவற்றை முன்வையுங்கள்; இல்லையென்றால் சி.ஐ.டி-யில் (CID) முறைப்பாடளியுங்கள்.அதன்பின்னர் நான் கப்பம் பெற்றுள்ளேனா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். சாணக்கியனாகிய உங்களுக்கு எதிராக நான் மாத்திரமே குரல் எழுப்புகின்றேன். அதனை அடிப்படையாகக் கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். தயவுசெய்து அதனை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
இதன்போது தனது பெயர் குறிப்பிடப்பட்டதால், தனக்கு விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தை சாணக்கியன் எம்.பி. கோரினார். எனினும், "உங்களின் கேள்விக்கே அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதற்காக மற்றுமொரு சந்தர்ப்பத்தைத் தர முடியாது" எனத் தெரிவித்த சபாநாயகர், சாணக்கியனின் கோரிக்கையை மறுத்தார்.
மேலும், "கடற்றொழில் அமைச்சர் ஒருவரே உள்ளார். நீங்கள் அவருக்கு எதிராகவே கருத்துரைத்தீர்கள். அதற்கான பதிலையே அவரும் தந்துள்ளார். இதற்காக விவாதம் செய்ய வேண்டாம். தயவுசெய்து நிறுத்துங்கள்" என்றார்.
இருப்பினும், தொடர்ச்சியாக உரையாற்ற நேரம் தருமாறு சாணக்கியன் கோரிக்கை விடுத்தமையால், குறுக்கிட்ட சபாநாயகர், "நீங்கள் சபை நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவீர்கள் என்றால் உங்களைச் சபையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.
இதற்குப் பதிலளித்த சாணக்கியன், "நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நான் அமர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நான் அமருகின்றேன்" எனக் கூறித் தொடர்ந்தும் உரையாற்றச் சந்தர்ப்பம் கோரினார்.
"நீங்கள் அமரவில்லை என்றால் இந்தச் சபையிலிருந்து உங்களை வெளியேற்றுவேன்" எனச் சபாநாயகர் மீண்டும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் செய்கின்ற மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விரைவில் நாடாளுமன்றத்திற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உறுதியாகத் தெரிவித்தார்.
9 minute ago
16 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
20 minute ago
1 hours ago