2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுநீரக மாற்று மோசடி விவகாரம்: பிரதான சந்தேகநபர் முகாமிலிருந்து தப்பினார்

Gavitha   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரகங்களைச் சட்டவிரோதமான முறையில் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜைகளில் பிரதான சந்தேகநபரான விஜிதாஜினி சுரேஸ் லக்ஷ்மன் குமார் தப்பியோடிவிட்டார் என்று கொழும்பு குற்றப்பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இந்த மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியப்பிரஜைகள் எண்மரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே பிரதான சந்தேகநபர், தப்பியோடிவிட்டார். என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றப்பிரிவினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறும், கடவுச்சீட்டை தடைச்செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் கட்டளையிட்டார்.

இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் 21 முத்திரைகளையும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இந்தியாவின் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக நீதவான் கட்டளையிட்டார்.

இந்தச் சந்தேகநபரின் மீது, பிடிவிறாந்து பிறப்பிக்கும் படியும் அவர், நாட்டைவிட்டு வெளியேற முயன்றால் கைதுசெய்யும் படி, குடிவரவு அதிகாரிகளுக்குப் பணிக்கும் படி, கொழும்பு குற்றச் செயல் பிரிவு விண்ணப்பம் செய்தது. இதனையடுதே மேலதிக நீதவான் கட்டளையிட்டார்.

சந்தேகநபர், எவ்வாறு தப்பியோடினார் என சிறை அதிகாரிகளிடம் விசாரிக்கும் படி, அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த சிறை அதிகாரியொருவர், மிரிஹான தடுப்பு முகாமின் பொறுப்பு, சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் இல்லையெனவும் இதனால், இந்த விடயத்தில் தாம் பொறுப்புக்கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

வழக்கு தொடுநர் சார்பில், மன்றில் பிரசன்னமாய் இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  எச்.டபிள்யூ. சந்திரதிலக, எட்டு சந்தேகநபர்களில் ஆறு பேரின் சிறுநீரகங்கள், இலங்கை வைத்தியசாலைகளில் வைத்து அகற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சந்தேகநபர்களிடமிருந்த இறப்பர் முத்திரைகளில் காணப்பட்ட வைத்தியர்கள், சட்டவுரைஞர்கள், சமாதான நீதவான்களின் உண்மைத் தன்மையை சரி பார்க்கும் படி, பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .