2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸிடம் 5ஆம் திகதி வீடியோ விசாரணை

George   / 2016 மார்ச் 01 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நீதிபதி எம்.சாந்தி, உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அரச சட்டத்தரணி எம்.பிரபாவதி மற்றும் சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருக்கும் இந்த உத்தரவு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், 'தேசிய தகவல் மையத்தின் மூலம், இலங்கையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் வழக்கை விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 5ஆம் திகதி காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநாவுகரசு என்பவரை சுட்டுக்கொலை செய்ததாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா மீது இந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 4ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் வசிப்பதால் இந்த வழக்கை காணொளிக்காட்சி மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று செசன்ஸ் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு 4ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.சாந்தி முன்பு கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.பிரபாவதி, 'இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், காணொளிக்காட்சி மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று வாதிட்டார். 

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ஆம் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

(இந்திய  செய்தி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X