Editorial / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம். இஸட். ஷாஜஹான்
2020 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், தமக்கான ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
2020-2024 காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நடப்பு வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 2025 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்குப் பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைச் சரிசெய்யுமாறும், நிலவும் ஓய்வூதியச் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாறும் அவர்கள் வலியுறுத்திப் பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே, ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும், கடந்த முறையும் இதே அதிகாரியே பேச்சுவார்த்தைக்கு வந்ததாகக் கூறி, அப்பேச்சுவார்த்தையில் திருப்தியில்லை எனத் தெரிவித்துப் பிரதிநிதிகள் வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வாயிலை நோக்கி முன்னேற முயன்றபோது பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பதற்றமான சூழல் நிலவியது. பொலிஸாரின் தடுப்பையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் வாயிலை அடைந்தனர்.
சூழல் பதற்றமடைந்ததையடுத்து, ஜனாதிபதி செயலகத்திலிருந்து மூன்று பிரதிநிதிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், "ஓய்வூதியச் சம்பள முரண்பாடு தொடர்பாக மே மாதம் ஒரு விசேட ஆணைக்குழு கட்டாயம் அமைக்கப்படும்" என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago