2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

சிக்கன் பிரியாணிக்கு பின் தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் சாவு

Editorial   / 2026 ஏப்ரல் 28 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிர மாநிலம், மும்பை பைதோனி பகுதியில் உள்ள முகல் கட்டிடத்தில் வசித்து வந்தவர் அப்துல்லா (40). இவரது மனைவி நஸ்ரீன் (35). இவர்களுக்கு ஆயிஷா (16), ஷைனப் (13) ஆகிய இரு மகள்கள் இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அப்துல்லாவின் வீட்டிற்கு உறவினர்கள் ஐந்து பேர் வந்திருந்தனர். இதனால், இரவு 10:30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் உறவினர்களுடன் இணைந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டனர். உறவினர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு, நள்ளிரவு 1:00 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் தர்பூசணி பழம் சாப்பிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் அருகில் உள்ள குடும்ப மருத்துவரிடம் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 'ஜே.ஜே. மருத்துவமனையில்' அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, அன்று காலை 10:15 மணியளவில் அப்துல்லாவின் கடைசி மகள் ஷைனப் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களிலேயே அப்துல்லாவின் மனைவி நஸ்ரீன் மற்றும் மூத்த மகள் ஆயிஷா ஆகியோரும் உயிரிழந்தனர். அன்றைய தினமே இரவில் அப்துல்லாவும் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணத்திற்கான காரணம் என்ன?

அப்துல்லா குடும்பத்தினருடன் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்களுக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. சிக்கன் உணவைச் சாப்பிட்ட பிறகு, நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட நிலையில் அப்துல்லா குடும்பத்தினர் நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

உணவு ஒவ்வாமை (Food Poisoning) அல்லது தர்பூசணி விஷத்தன்மையாக மாறியதால் இந்தத் துயரம் நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .