Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகவேல் சண்முகன்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த அவர், தனது விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில், ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையின் புதிய நிர்வாகத்தின், மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்த ஹுஸைன், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம், எந்தவொரு அங்கத்துவ நாட்டாலும், தங்களுடைய நிகழ்ச்சிநிரலைக் கொண்டு செல்வதற்காகத் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கப்படவில்லை எனவும், இதன்போது அவர், உறுதிசெய்தார்.
பெண்கள் மீதும் சிறுமிகள் மீதுமான பாலியல் வன்முறைகளும் துன்புறுத்தல்களும், அது தொடர்பான அரச நிறுவனங்களால் மோசமாகக் கையாளப்பட்டததாகத் தெரிவித்த அவர், அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள், இராணுவம் அல்லது பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, இது அதிகமாகக் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் ஹைபிரிட் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறையை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். இதேவேளை, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான விசாரணையே நிகழ்த்தப்பட்டது எனவும் குற்றங்கள் தொடர்பான விசாரணை நிகழ்த்தப்படவில்லை. எனினும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில், நீதிமன்றத்தின் மூலமே தெரியவரும் என்றார்.
தனது இந்தப் பயணம், இதற்கு முன்னர் வருகைதந்த நவநீதம்பிள்ளையின் பயணத்தை விட கூட்டுறவு மிக்கதாகவும் வரவேற்பைத் தருவதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டிய ஹுஸைன், அந்தக் காலத்தில், மனித உரிமைகளுக்கான எந்தவோர் உயர்ஸ்தானிகரும் சுட்டிக்காட்ட வேண்டியிருந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியமைக்காக, அவரது நற்பெயர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்டமையை ஞாபகமூட்டினார்.
இலங்கையில் காணப்படும் புதிய சூழலில், சிவில் சமூகத்தில் மிதவாதக் குரல்களும் வெளியே காணப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இருந்த போதிலும் சிலவேளைகளில், வெறுப்பினதும் இனவெறியினதும் குரல்கள், இன்னமும் அதிக சத்தத்துடன் ஒலிப்பதாகவும், அதன் காரணமாக, அவை அதிகளவில் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுத விரும்பியதை எழுத விரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 'அச்சப்படும் சூழல், கணிசமானளவு இல்லாது போயுள்ளது, முக்கியமாக கொழும்பிலும் தெற்கிலும். வடக்கிலும் கிழக்கிலும் அது குறைவடைந்துள்ள போதிலும், கவலைதரும்விதமமாக இன்னமும் காணப்படுகிறது' என்றார்.
இலங்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ள என்பதை ஏறத்தாழ அனைவருமே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அவர், எந்தளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதிலேயே மாற்றுக் கருத்துகள் காணப்படுவதாகத் தெரிவித்தார். பெரும் அச்சத்தை ஏற்படுத்திய வெள்ளை வான் கடத்தல்கள், மிக அரிதாகவே அறிக்கையிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தில், சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டமையையும், அதனைத் தொடர்ந்து, பௌத்த விஹாரைக்கு வடமாகாண முதலமைச்சர் விஜயம் செய்தமையையும், தன்னைப் படுகொலை செய்ய முயன்ற நபரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பளித்து விடுவித்தமையையும், அண்மைக்காலத்தின் சிறப்பான நிகழ்வுகளாகப் பட்டியலிட்ட ஹுஸைன், வடக்கிலும் கிழக்கிலும், ஆளுநர்களாக சிவிலியன்கள் காணப்படுவதையும் சுட்டிக்காட்டி, அதை 'முக்கியமான முன்னேற்றம்' எனத் தெரிவித்தார்.
பல்வேறான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், புதிதாகத் தொடங்குவதின் ஆரம்ப நிலையிலேயே, இலங்கை காணப்படுகிறது என, அவர் தெரிவித்தார்.
தனது விஜயத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் துணை ஆயுதக் குழுக்களாலும் பாதிக்கப்பட்ட முவ்வினங்களையும் சேர்ந்தவர்களையும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களையும், காணாமல் போன இராணுவத்தினரின் தாய்மாரையும் சந்தித்ததாகத் தெரிவித்த அவர், நீண்ட கால குண்டுத் தாக்குதல்களாலும் கொலைகளாலும் ஏனைய துஷ்பிரயோகங்களாலும் ஏற்பட்டுள்ள வருந்துதலும் அச்சமும் குறித்து, தான் அறிவார் எனத் தெரிவித்தார்.
அத்தோடு, கொழும்புக்கும் வடக்கு - கிழக்குக்குமிடையில் காணப்படும் பாரிய வித்தியாசத்தையும், அவர் சுட்டிக்காட்டினார். 'கொழும்புக்கு நீங்கள் விஜயம் செய்யும்போது, பரபரப்பான நகரொன்றை நீங்கள் பார்க்கிறீர்கள். பாரிய கட்டுமானத் தளங்கள், தூய்மையான வீதிகள், செழிமையான வணிகங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியும். வெற்றிகரமான சுற்றுலாத் தொழிற்றுiயை நீங்கள் பார்க்கலாம். வடக்கு, கிழக்குக்கு விஜயம் செய்யும் போது - குறிப்பிட்ட சில இடங்களிலாவது - சேதமடைந்த, மந்தமான இடங்களையும் வறுமையையும் தொடரும் இடப்பெயர்வையும் காணலாம்.
இதேவேளை, வடக்கு கிழக்கில், இராணுவம் தம்வசம் வைத்திருக்கின்ற பொதுமக்களின் காணிகளை உரித்துடைய உரிமையாளர்களிடம் கையளிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பிரதமரின் கருத்துத் தொடர்பில் வருத்தம்
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்தார். 'பாதுகாப்புத் தொடர்பாக எஞ்சியுள்ள தடுப்புக் கைதிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது விடுவிக்கவோ அரசாங்கம், வழிவகையொன்றைக் காண வேண்டும். மேலதிகமாக, காணாமல் போயுள்ள அனேகமானோர் இறந்துவிட்டதாகத் தெரிவித்த பிரதமரின் அண்மைய கருத்து, அதுவரை காலமும் நம்பிக்கையைக் கொண்டிருந்த குடும்பங்களிடையே பாரிய துயரை ஏற்படுத்தியுள்ளது. யார் இன்னமும் உயிருடன் காணப்படுகிறார்கள், யார் இறந்துள்ளார்கள் அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அடையாளங் காண்பதற்கான துரித நடவடிக்கையொன்று, அந்தக் கருத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களின் இறப்புத் தொடர்பில் சரியாக கணக்குக் காட்டப்பட வேண்டும், அத்தோடு, அவ்வுயிரிழப்புகள், சட்டத்துக்கு உட்பட்டவையா அல்லது இல்லையா என்பதும் கண்டறியப்பட வேண்டும்' என மேலும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago