Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை (10) கார் வெடித்த சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் காரை ஓட்டி வந்தவர் பெயர் முகமது உமர் என்பதும், அவர் டாக்டர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் தற்கொலை படை பாணியில் தாக்குதலை நடத்தி உள்ளார். காரில் சிதறி கிடந்த உடல் உறுப்புகளால் இது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (10) திடீரென்று கார் வெடித்து சிதறியது. திங்கட்கிழமை (10) மாலை 6.52 மணிக்கு புதுடெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே மெதுவாக சென்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் டூவீலர்கள், கார்கள், மின்சார வாகனம் என்று 13 வாகனங்கள் எரிந்தன. 9 பேர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கார் வெடிப்பின் பின்னணி குறித்து அரசு, பொலிஸ் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தை பார்வையிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரணை மேற்கொண்டார்.
அதன்பிறகு அவர் கூறுகையில், "நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை நடத்துவோம்." என்றார். மேலும் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் புதுடெல்லி பொலிஸாருடன், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையை தொடங்கி உள்ளது. டெல்லி கோட்வாலி போலீசார் ‛உபா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் உபா (Unlawful Activities (Prevention) Act) 16, 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது பொதுவாக பயங்கரவாதிகள் மீது பதியப்படும் பிரிவாகும். இதனால் தான் இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையே, தான் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்றவர் பற்றி அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டெல்லியில் கார் வெடிப்பை நிகழ்த்தியவர் முகமது உமர் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவரது போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஏனென்றால் அந்த கார் முகமது உமருக்கு சொந்தமானது. இதனால் அவர் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதற்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன.
காரில் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. அது முகமது உமரின் உடல் பாகங்கள் என்று கருதப்படுகிறது. இதனால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த உடல் பாகங்களில் இருந்து கிடைக்கும் டிஎன்ஏவை முகமது உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏவுடன் பொருத்தி பார்க்கப்படும். இரண்டும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் கார் வெடிப்பை நிகழ்த்தியது முகமது உமர் தான் என்பது உறுதி செய்யப்படும்.
இதற்காக முகமது உமரின் தாய் ஷகீமா பானோ, சகோதரர்களான ஆசிக் மற்றும் ஜாரூர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து டிஎன்ஏக்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது.
இதற்கிடையே தான் முகமது உமர் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. முகமது உமர் டாக்டர் ஆவார். இவர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் (Al Falah Medical College) டாக்டராக பணியாற்றி வந்தார். இவர் தற்கொலை படை தாக்குதல் பாணியில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளார். இவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
ஏனென்றால் முகமது உமருக்கும், ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் போலீசாரால் வெடிப்பொருட்கள் வைத்து சதித்திட்டம் தீட்டியதாக கைதான ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் அடீல் அகமது ராதர் மற்றும் காசிகுந்த் பகுதியை டாக்டர் முஜாமில் ஷகீல் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் அடீல் அகமது ராதர் ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரமாக போலீசார் தீவிரமாக சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர். ஸ்ரீநகர், அனந்தநாக், கண்டேர்பால், சோபின் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தி வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ஜெய்ஷ் இ முகமது மற்றும் அன்சார் அஸ்வதுல் ஹிந்த் (AGH) ஆகிய பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அதன்படி தான் அடீல் அகமது ராதர் கைது செய்யப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதன்பிறகு அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் ஹரியானாவின் ஃபரிடாபாத்தை மையாக கொண்டு செயல்பட்டுள்ளனர். அங்குள்ள தாஜ் கிராமத்தில் உள்ள முஜாமில் ஷகீலின் வாடகை வீட்டில் இருந்து 358 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது. அதேபோல் ஏகே 47 ரக துப்பாக்கி, இன்னும் பல துப்பாக்கிகள், 20 டைமர்ஸ், வாக்கி டாக்கிகள் மற்றும் பிற வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தற்போது வரை மொத்தம் 3 ஆயிரம் கிலோ வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐஇடி வகை குண்டுகள் தயாரிப்பதற்கான எலக்ட்ரானிக் சர்க்கியூட், பேட்டரி, வயர்கள், ரிமோட் கண்ட்ரோல், டைமர்ஸ், மெட்டல் ஷீட், கெமிக்கல் உள்ளி்ட்டவை அடங்கும்.
மேலும் அடீல் அகமது ராதர் கொடுத்த தகவலின் பேரில் தான் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள டாக்டர் முஜாமில் ஷகீல் கைது செய்யப்பட்டார். மேலும் தனது கூட்டாளிகளான அடீல் அகமது ராதர் மற்றும் முஜாமில் ஷகீல் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டதால் முகமது உமர் அச்சமடைந்துள்ளார். எங்கே தன்னையும் போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்து நடுங்கி உள்ளார்.
இதனால் தாமதிக்காமல் அவர் அவசரஅவசரமாக டெல்லியில் கார் ஓட்டி வந்து தற்கொலை படை தாக்குதல் நடத்தி 9 பேரை கொன்று உள்ளதாக போலீசார் நம்புகின்றனர். மேலும் கார் வெடிப்புக்கு முகமது உமர் டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. செங்கோட்டை என்பது பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் மாலையில் ஏராளமானவர்கள் கூடுவார்கள் என்பதால் அந்த இடத்தை நோக்கி வந்து முகமது உமர் தாக்குதல் நடத்தி உள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் முதல் ஓணர் முகமது சல்மான். அவர் அந்த காரை நதீம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அதன்பிறகு அந்த கார், இன்னொரு கார் வியாரிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிறகு இந்த கார் அமிர் என்பவருக்கும், அதன்பிறகு தாரிக் என்பவருக்கும் பிறகு கடைசியாக முகமது உமருக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
33 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago