2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

டிக் டொக்கில் விளையாட்டு காட்டிய பெண்கள் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக் டொக் வீடியோக்களை அனுப்பி, சுவிஸ் நாட்டில் வசித்து வரும் 52 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 45 இலட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 

சுவிஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு பெண்ணொருவரின் டிக் டொக் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வீடியோக்களை பார்த்து, வீடியோக்கள் வரும் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை பேணி உள்ளார். 

அந்த இலக்கத்தில் இருந்து கதைத்த பெண்ணும் தனக்கு 22 வயது , தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என கூறி பழக ஆரம்பித்து பழக்கம் நெருங்கிய தொடர்பாக மாற பல்வேறு கட்டங்களில் , பல்வேறு காரணங்களை கூறி சுமார் 45 இலட்சத்துக்கும் மேலாக பணம் பெற்றுள்ளார். 

பெண்ணிடம் வீடியோ கோல் கதைக்க பல முறை சுவிஸ் நாட்டவர் முயற்சித்த போதிலும் , அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் , அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , பெண்ணை நேரில் சந்திக்க கோரிய போதிலும் அப்பெண் நேரில் சந்திக்க மறுப்பு தெரிவித்து , தொடர்பை துண்டிக்க , சந்தேகம் அடைந்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக் டொக் வீடியோவில் காணப்பட்ட பெண்ணை கைது செய்து விசாரணை செய்த போது , அப்பெண்ணுக்கு இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது 

அதனை தொடர்ந்து சுவிஸ் நாட்டில் இருந்து பணம் போடப்பட்ட வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து , கணக்கிலக்கத்திற்கு சொந்தமான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , தனக்கு தெரிந்தவர்  தான் எனது கணக்கு இலக்கத்திற்கு பணம் போட சொல்லி , பணம் போடப்பட்டது என கூறியுள்ளார். 

பின்னர் அந்த பெண் கூறிய 47 வயதான பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த பெண்ணுக்கும் , சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருக்கு இடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டு அவர் கடந்த முறை யாழ்ப்பாணம் வருகை தந்து அப்பெண்ணுடன் நெருக்கமாகவும் பழகியுள்ளார். 

பின்னர் அவர் சுவிஸ் நாட்டிற்கு சென்ற பின்னர் , இப் பெண்ணுடனான தொடர்பை குறைத்துள்ளார்.  இந்நிலையில் அவரின் பலவீனங்களை அறிந்திருந்த குறித்த பெண் , தனது நண்பியின் பெயரில் உள்ள டிக் டொக் ஐடியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் இருப்பதனை அவதானித்து , அப்பெண்ணின் வீடியோக்களை தரவிறக்கி , இவருக்கு வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி , அப்பெண்ணின் பெயர் ஊடாக உறவை வளர்த்துள்ளனர். 

பணம் போட சொல்லி கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிலக்கத்தில் உள்ள பெயரும் , டிக் டொக் வீடியோவில் உள்ள பெயரும் ஒன்றாக இருந்தமையால் , அவரும் சந்தேக படாது பணத்தை அந்த கணக்கு இலக்கத்திற்கு போட்டுள்ளார். 

பணத்தை தொடர்ந்து ஒரு கணக்கு இலக்கத்திற்கு பெறாது , மற்றொரு பெண்ணின் கணக்கு இலக்கத்தையும் கொடுத்து . அந்த பெண்ணின் கணக்கு இலக்கம் ஊடாகவும் பணம் பெற்றுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

 

அதனையடுத்து பிரதான சந்தேக நபரான 47 வயதான பெண்ணும் , வங்கி கணக்கு இலக்கத்தின் உரிமையாளர்களான இரு பெண்களுமாக மூன்று பெண்களையும் கைது செய்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (04) முற்படுத்தியவேளை , மூவரும் தம் மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதுடன் , பணத்தினையும் மீள வழங்குவதாக மன்றில் உறுதி அளித்துள்ளனர் . 

அதனை தொடர்ந்து மூவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது .

 எம் . றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X