Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினேத்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அதன் படி, அந்த இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் வெள்ளிக்கிழமை (21) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந் நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழக பேரவை செயலாளரினால் கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாக புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களை பூர்த்தி செய்துள்ளாரா? என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமை தொடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
33 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
51 minute ago