2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

“சில நாட்கள் அழுது தீர்த்தேன்”

Editorial   / 2025 நவம்பர் 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை கிரேஸ் ஆண்டனி, தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பதிவு ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் எடை குறைப்பின் போது தான் எதிர்கொண்ட சவால்களைச் சொல்லி நெகிழ்ந்துள்ளார்.

கடந்த 2016-ல் ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற மலையாள மொழிப் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் கிரேஸ் ஆண்டனி. கும்பளங்கி நைட்ஸ், தமாஷா, ஹலால் லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் மூலம் அவர் கவனம் ஈர்த்தார்.

தமிழில் ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தில் குளோரி என்ற பாத்திரத்தில் அன்புவின் அம்மாவாக நடித்திருப்பார். வெப் சீரிஸ், குறும்படத்திலும் நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தனது காதலரை மணந்தார். இந்நிலையில், உடல் எடையை குறைத்தது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் எடை குறைப்புக்கு முன் மற்றும் எடை குறைப்புக்கு பின் எடுக்கப்பட்ட படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

“8 மாதங்களில் 15 கிலோ. 80 கிலோவில் இருந்து 65 கிலோ எடையை எட்டியுள்ளேன். இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. எனக்குள் நானே அமைதியாக இருந்து போராட வேண்டியிருந்தது. சில நாட்கள் அழுது தீர்த்தேன், சில நாட்கள் என்னால் முடியுமா என சந்தேகம் கொண்டேன், சில நாட்கள் அது குறித்து கேள்வி எழுப்பினேன்.

இருப்பினும் இந்தப் போராட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் எனக்கு சின்ன சின்ன வெற்றிகள் கிடைத்தன. நானே அறியாத எனக்குள் இருக்கும் உறுதியைக் கண்டேன். இதில் நம்பிக்கை இழந்த போதிலும் விடாமுயற்சியோடு போராடும் பெண்ணைக் கண்டேன். இந்நேரத்தில் எனது பயிற்சியாளர் அலி ஷிபாஸுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சீராக எனக்கு வழிகாட்டினார்.

இந்த மாற்றம் புகைப்படத்துக்கு அப்பாற்பட்டது. இந்தப் பயணம் ஒரு நினைவாக அமைந்துள்ளது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிறிதாக இருந்தாலும் குழப்பம் இல்லாமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என உணர்த்தியது. இதற்கு நேரம் எடுக்கும் என புரிந்தது. நீங்கள் முயற்சித்தால் அதை தொடருங்கள். ஒருநாள் நிச்சயம் உங்கள் கண்ணீர் மற்றும் சந்தேகங்கள் அனைத்தும் மதிப்பு மிக்கது என்பதை அறிவீர்கள்” என அந்தப் பதிவில் கிரேஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X