Janu / 2026 மார்ச் 23 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (23) அன்று கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (23) காலை ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இனவாதம், பிரதேசவாதம் மற்றும் சாதியவாதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
"நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் பிரதிநிதிகள், அண்மைக்காலமாக பொது தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில், மனித கண்ணியத்திற்கு எதிரான சொற்களைப் பயன்படுத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதுடன், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.
மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடனும் நாகரிகத்துடனும் முன்வைத்துத் தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள். ஆனால், அதற்குப் பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் இழைக்கப்படும் அவமதிப்பாகும்.
அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம், ஆதிக்க சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் மொழியையும் அணுகுமுறையையும் முற்றாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரையாடல்கள் மட்டுமே அரசியலின் அடிப்படையாக அமைய வேண்டும்.
இவ்வாறான பொறுப்பற்ற பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் பகைமை மனப்பான்மை ஆழமடையும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது, குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மன அழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அத்துடன், இனம், பிரதேசம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றை தடுத்து தண்டிக்கவும் கூடிய வலுவான பாராளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டு, அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்களது ஒழுக்க விதிகளில் வெறுப்புப் பேச்சுக்களை தடுக்கும் உறுதியான வழிகாட்டல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய கொள்கை மாற்றங்களே நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த அமைதிக்கும் அடித்தளமாக அமையும்" என மேலும் தெரிவித்தனர்.






36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
2 hours ago