2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

நீலப்பொருளாதாரத்தக்கு ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு

Editorial   / 2025 நவம்பர் 23 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு  செலவுத் திட்டத்தில்  ப்ளு எக்கோனமிக்  எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச தெரிவித்தார்.

அக்வா பிளான்ட் இலங்கை - 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி  கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் வௌ்ளிக்கிழமை (21)  ஆரம்பமானது. கண்காட்சியின் 3ஆம் நாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. இதில்,   வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் போது, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக 2025ம் ஆண்டுக்கான படகுகளின் கணக்கெடுப்பு அறிக்கை கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தேவினால் அமைச்சரிடம்  கையளிக்கப்பட்டது.

மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின் போது செயல்பட்ட மீனவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு, அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், மொறட்டுவ நகர சபையின் மேயர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

மீனவ சமூகத்தின் பண்பாடுகளை பிரதிபலிக்கும் முகமாக யாழ்.குருநகர் இளைஞர் கலை கழகத்தின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக அரங்கேறியது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கண்காட்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கு உதவி வழங்கிய, ஆலோசனை வழங்கிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  3 ஆம் நாள் அமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ள அமைச்சர் வசந்த சமரசிங்கவையும் வரவேற்கின்றேன்.

மீன்பிடித்தொழில்துறையை மேம்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டும். புத்தாக்க சிந்தனைகள் வந்துள்ளன. முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இதற்குரிய கல்வி வாய்ப்பு, ஆராய்ச்சி போன்ற விடயங்கள் தொடர்பிலும் பரந்தப்பட்ட அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். 

நீலப்பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும்.  இதற்காக முதல் தடவையாக வரவு- செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது.   ஆரம்பக்கட்ட  நடவடிக்கைக்காகவே  இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் ஆரம்பித்தில்  இதற்குரிய வேலைத்திட்டம்  ஆரம்பமாகும்.

நாட்டை சுற்றி கடல் வளம் உள்ளது. எனினும், ஏற்றுமதி வருமானம் திருப்திகொள்ளக்கூடிய வகையில் இல்லை. எனவே, ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கும் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி என இரண்டும் முக்கியம். டின்மீன் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடி மட்டும் அல்ல அத்துறையில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை இக்கண்காட்சியில் காண முடிந்தது. எனவே, நாம் கடல் வளங்களை, நீரியல் வளங்களை பயன் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X