2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நல்லாட்சியுடன் கைகோருங்கள்: ரணில்

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவிதா சுப்ரமணியம்

40 வருடங்களாக தனித்திருந்த தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. தற்போது எம்முடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் கைகோர்த்துவிட்டது.

இதேபோன்று, ஏனைய அனைத்துக் கட்சிகளும் எம்முடன் கைகோர்த்து, மக்களைப்பற்றி சிந்தித்துச் செயலாற்றக்கூடிய அரசாங்கமொன்றை உருவாக்க முன்வரவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்றுப் புதன்கிழமை (03) பிற்பகல், அலரி மாளிகையில் கையொப்பம் இடப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். இதன்பின்னர், உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு, டிசெம்பர் மாதம் முதல் ஆலோசனை செய்து வருந்தோம். ஜனவரி மாதம் நான் சுவிட்ஸர்லாந்துக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டதால் தான், அந்த ஒப்பந்தத்தை இன்று (நேற்று) மேற்கொண்டோம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, இந்த நல்லாட்சியின் பயணத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதனால் நான் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

ராஜபக்ஷவின் ஆட்சியை முறியடிப்பதற்கு முதலாவதாக முன்வந்தவர் பீல்ட் மார்ஷல் பொன்சேகா. இதனால் அவர் சிறைக்கும் சென்று வந்தார்.

40 வருடங்களாக தனித்திருந்த தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கொண்டாடும் முதலாவது சுதந்திர தின நிகழ்வு இதுவாகும்.

உங்களைப் பற்றி யோசிக்கக்கூடிய ஒரு அரசாங்கமே அனைவருக்கும் தேவை. இன்னும் ஐந்து வருடத்துக்கு பின்னர், மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை கொடுக்கும் அரசாங்கமாக நாம் இருப்போம் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.

இந்த நேரத்தில்தான், சுதந்திர தினத்தின் போது தேசிய கொடி ஏற்றக்கூடாது என்றும் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டாம் என்றும் சிலர் கோஷஎழுப்பிக்கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள், தேசியக்கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் நாம் தேசியக் கொடியை பறக்கவிட்டோம். அப்படியாயின் தற்போது எந்த கொடியை பறக்கவிடுவது?

அப்படியானால் மாவீரர் தினத்தையே சுதந்திர தினமாக கொண்டாடவேண்டி ஏற்படும். தற்போது வடக்கிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால், எமது பயணத்தை சீரானதாக மாற்றிக்கொள்வதற்காகவே நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்பதை அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்' என்றார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உரையாற்றுகையில் கூறியதாவது,

'கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது ஜனநாயகக் கட்சி, கடந்த 3 வருட காலமாக தனியாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த காலத்தில் நாட்டுக்கு ஒரு தகவலைக்கூறவேண்டி நிலை ஏற்பட்டது. மக்களுக்கு வாழக்கூடியமான ஒரு சூழலை அமைப்பதற்கான ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

இவ்வாறிருக்கையில் நாம் சிறியதொரு பாதையில் செல்லாமல், எமது நாட்டைப் பற்றி பல்வேறு திட்டங்களை நனவாக்கிக்கொள்வதற்காக வேண்டியே, இந்த பெரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம்.

எனது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையை ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே ஆரம்பித்தேன். இதனால், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு அங்கத்தவராக இருப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளேன்.

2010ஆம் ஆண்டு இருந்த மோசமான அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். 2010ஆம் ஆண்டு, நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். நான் ஆரம்பித்த அரசியல் வாழ்க்கையை தற்போது தொடர்வதற்கான சந்தர்ப்பம் தற்போது எனக்கு கிட்டியுள்ளது. எனவே ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவராக இருந்துக்கொண்டு எனது பயணத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி எனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவர் செய்த தவறுகள் அனைத்தும் தற்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அவருடன் இணைந்து ஓர் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதும் நான், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தமைக்கு காரணமாகும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X