2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நல்லிணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக மோடி உறுதி

Niroshini   / 2016 மே 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பை இந்தியா வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) மாலை ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்திய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹைதராபாத் இல்லத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இந்திய பிரதமர் உற்சாகமாக வரவேற்றதோடு, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலும் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்திய அரசின் அனுசரணையுடன் மேற்கத்தைய மருந்து உற்பத்தி வலையத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் இச்சந்தர்ப்பதில் கலந்துரையாடினர்.

இலங்கையின் தேவையான மருந்து வகைகளில் 80 சதவீதமானவை இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற அதேசமயம், இந்த மருந்து உற்பத்தி வலையத்தினை ஸ்தாபிப்பதன் மூலம்  இந்த மருந்துகளை நாட்டினுள்ளேயே உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு நமது நாட்டுக்கு கிடைக்கும்.

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக கலாசார உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் இருவருக்குமிடையில் விரிவாகக் கலந்துரையாப்பட்டதுடன், இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார வலையம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

15 மாதங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியோருக்கிடையில் இடம்பெறும் 6வது உத்தியோகபூர்வ சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று தன்னுடைய முதலாவது உத்தியோகபூர்வ  விஜயமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போதும், ஐக்கிய நாடுகள் சபையின்; பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போதும், மோல்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின்போதும், பாரிஸில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டின்போதும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்புக்ள் இடம்பெற்றன.

அதன்படி தெற்காசியாவின் இரு நாடுகளுக்கிடையில் அரச தலைவர்கள் கூடியளவு சந்தித்த நாடுகளாக இந்தியா மற்றும் இலங்கை காணப்படுகின்ற அதேவேளை, அந்த சந்திப்புகள் தெற்காசிய இரண்டு அயல் நாடுகளான இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான தொடர்புகளையும் இராஜதந்திர உறவுகளையும் மேலும் பலப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.  

இருதரப்பு கலந்துரையாடல்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய இராப்போசன விருந்தில் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X