2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

நூரளைக்கு இந்தியாவிடம் உதவி கோரியது கூட்டணி

Kogilavani   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை, இன்று (7) சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி, நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு பிசிஆர் இயந்திரங்களை தந்துதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 

இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கூட்டணியின் பிரதித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துரைத்த வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, கொரோனா வைரஸ் பரவலின் நெருக்கடிமிக்கச் சூழலில், இந்தியாவின் பங்களிப்பு இலங்கைக்கு மிகவும் அவசியமானது என்று, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஏனைய அபிவிருத்திகளுக்கும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றுக் கோரியதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கும், குறிப்பாக மலையக மக்களுக்கும் செய்துவருகின்ற உதவிகளுக்கும் நன்றியைத் தெரிவித்ததாகக் கூறினார். 

இன்றைய சமகால அரசியல் தொடர்பாக மிகவும் விரிவாகக் கலந்துரையாடியதாகவும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோரியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மலையக மக்களின் பாதுகாப்புக்காக,  டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கும் நுவரெலியா வைத்தியசாலைக்கும் இந்திய அரசாங்கத்தின் ஊடாக இரண்டு பிசிஆர் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்ததாகவும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மேற்படி இயந்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்குப் பணிப்புரை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்தியா, அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் இராமர் கோவிலுக்கு, நுவரெலியா சீதாஎலிய கோவிலிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட புனித கல் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .