2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நெரிசல்மிக்க பகுதிகளுக்கு தனியான பஸ் கட்டணம்

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் வாகன நெரிசல்மிக்க பகுதிகளுக்கென, தனியான பஸ் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அதற்கு ஏற்ற வகையில், கட்டணங்களை தீர்மானித்து விலைச் சூத்திரத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

'இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர், நாட்டில் இவ்வாறான வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருக்கவில்லை. எனினும், தற்காலத்தில் நகர்புறங்கள் மற்றும் நகர்புறத்தை மிக அண்மித்த வீதிகளில் வாகன நெரிசல்களைக் காணமுடிகிறது. அவ்வாறான வாகன நெரிசல்கள் ஏற்படும் வீதிகளில், பஸ்கள் பயணிக்கும் போது அதிகளவான எரிபொருட்கள் வீண்விரயமாகின்றன. ஆகையினால், அவ்வாறான பஸ்களுக்கு, சாதாரணமாக கட்டணமொன்று அறவிடப்படல் வேண்டும்' என்றும் அவர் கூறினார். 

இதேவேளை, வாகன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கென, நிர்வாகமொன்று இல்லையானால், தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகும். கடந்த வருடத்தில் மாத்திரம், 6 இலட்சம் பயணிகளை தனியார் பஸ்கள் இழந்துள்ளன என்றும் கெமுனு விரேஜரத்ன கூறினார். 

'எரிபொருட்களின் விலைகளைக் குறைத்தமை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய இலகு நடைமுறைகள் காரணமாக கடந்த வருடத்தில் மட்டும் 105,628 கார்கள், 129,547 முச்சக்கரவண்டிகள் மற்றும் 372,889 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 

'வற்' திருத்தம், பஸ்களில் பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்தல் மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று கெமுனு விஜேரத்ன மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X