Editorial / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஒன்றில் சரஸ்வதி பூஜைக்காக ரூ.100 பணம் கொண்டு வராத மாணவிகளுக்கு, 100 முறை தோப்புக்கரணம் தண்டனை வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கு மதிய உணவும் மறுக்கப்பட்ட சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள ஜார்முண்டி பெண்கள் நடுநிலைப் பாடசாலையில் இந்த அவலம் நடந்துள்ளது. அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தனஞ்செய் என்பவர், பூஜைக்காக ஒவ்வொரு மாணவியும் தலா 100 ரூபாய் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவி நீது குமாரி கூறுகையில், “என்னை 100 ரூபாய் பணம் கொண்டு வரும்படி தலைமை ஆசிரியர் கேட்டார். என்னால் தர முடியாது என்று சொன்னபோது, பூஜை முடிந்ததுமே என்னை 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டித்தார். அன்றைய தினம் எனக்கு மதிய உணவும் வழங்கப்படவில்லை.
வெறும் வயிற்றில் 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் எனக்கு வயிறு மற்றும் கால்களில் பயங்கர வலி ஏற்பட்டது. உடல்நலம் குன்றியதால் வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டேன். ஆனால், தலைமை ஆசிரியர் அதற்கு அனுமதிக்காமல், என்னைப் பார்த்து ‘சூர்ப்பணகை’ என்று கிண்டல் செய்தார். பாடசாலை முடியும் வரை அங்கேயே அமர வைக்கப்பட்டேன்” எனத் தனது தாயாரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார்.
நீது குமாரி மட்டுமல்லாமல் ஜூலி, ஷிவாங்கி, அமன் உள்ளிட்ட மற்ற மாணவர்களும் தலைமை ஆசிரியர் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளனர். பணம் கொண்டு வராத மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது எனத் தடை விதித்ததாகவும், வகுப்பறையின் பூட்டு காணாமல் போனதற்கு அபராதமாக ‘லிங்க்’ (Link) கம்பெனி பூட்டு ஒன்றை வாங்கி வரும்படி மாணவர்களைத் தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மாணவிகளும் அவர்களது பெற்றோரும் மாவட்டத் துணை ஆணையர் (DC) அபிஜீத் சின்ஹாவிடம் முறையான புகார் அளித்துள்ளனர். இது குறித்து துணை ஆணையர் கூறுகையில், “சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை எழுத்துப்பூர்வமான அறிக்கை கிடைக்கவில்லை என்றாலும், விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு உறுதியானால் பள்ளி நிர்வாகத்தின் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
கல்வி கற்கும் இடத்தில் மத ரீதியான பூஜைகளுக்காக ஏழை மாணவிகளைத் துன்புறுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .