Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பட்டலந்த வீட்டுத்தொகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இரண்டு வீடுகளை வழங்கியமை தொடர்பில் நான், அதற்கு மறைமுகப் பொறுப்பாளி என்று பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த அறிக்கையை தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள ரணில் விக்ரமசிங்க,
1987 இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர், மக்கள் விடுதலை முன்னணி, நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது. அந்த நேரத்தில் நாட்டில் உள்ள கேந்திர நிலையங்களைப் பாதுகாப்பதற்கான அதிகாரம் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியால் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது.
பியகம பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மஹாவெலியில் இருந்து கொழும்புக்கு மின்சாரத்தை விநியோகித்த மத்திய நிலையங்கள், வர்த்தக வலயங்கள், பொருளாதார மத்திய நிலையங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இராணுவம் அழைக்கப்பட்டது.
பாதுகாப்பு தரப்பின் தங்கியிருப்பதற்காக இலங்கை உர தயாரிப்பு கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அந்த காலத்தில் கைவிடப்பட்ட கட்டிடம் மற்றும் வீடுகள் சிலவற்றை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அப்போது, இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சிலர், அந்த வீடுகளில் குடியிருந்தனர்.
அந்த வன்முறை காலத்தில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரியை படுகொலை செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்ன, என்னுடன் பேசினார். இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக, வீட்டுத் தொகுதியில் வெற்றிடமாக இருக்கும் வீடுகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில், அந்த வீடுகளில் ஒன்றை களனி பொலிஸ் அதிகாரி நளின் தெல்கொடவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், மாகாண சபை உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், இன்னும் சில மாகாண சபை உறுப்பினர்களின் வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதன்பின்னர், பட்டலந்த பிரதேசத்தில் வதைமுகாம் இருந்ததாக கூறி, 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆணைக்குழுவை நியமித்தார். அந்த ஆணைக்குழு முன்னிலையில் பல நபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். என்னை சாட்சியாளராக மட்டுமே அழைத்தனர்.
அப்போது நான், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தேன். பட்டலந்த ஆணைக்குழு, அரசியல் சேறு பூசும் நடவடிக்கைக்காக மட்டுமே நியமிக்கப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை. அறிக்கையின் தீர்மானத்தின் பிரகாரம், அமைச்சர் என்ற வகையில், பொலிஸ் கண்காணிப்பாளர் ஊடாக பொலிஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமை பிழையானது என்று. வீடுகளை பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் தெல்கொடவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறெந்த காரணங்களும் எனக்கு பொருந்தாது. மக்கள் விடுதலை முன்னணி 1988-90 காலத்தில் செய்த பயங்கரவாத செயல்பாடுகள் பல தொடர்பில் முடிவுரை அவதானிப்புகளில் காட்டப்பட்டுள்ளன. அதன் பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை மறைத்ததாக யாரும் குற்றம் சாட்ட முடியாது. அது 2000 ஆண்டு பாராளுமன்றக் கூட்டத்தொடர் அறிக்கையாக இருந்தது. எனினும், யாரும் அது தொடர்பாக விவாதம் நடத்துமாறு கோரவில்லை. குறைந்தது மக்கள் விடுதலை முன்னணியும் கோரவில்லை. பெரும்பாலானவர்கள் அறிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, பாராளுமன்றத்தில் அதைப் பற்றி விவாதிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நாம் நம்பலாம்.
இதுவரை ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் கட்சியும் இந்த அறிக்கையின் மூலம் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற முயன்றதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றக் கூட்டத்தொடர் அறிக்கையை விவாதிக்கும் பாரம்பரியம் இந்த நாட்டிலோ அல்லது பிற பாராளுமன்றங்களிலோ இல்லை என்றார்.
21 minute ago
26 minute ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
8 hours ago
8 hours ago