2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

Freelancer   / 2025 ஜூலை 30 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பவர் ஸ்டாரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஏமாறுபவர்கள் குறித்த தகவல்களும், அதன் பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்படுவதும் வழமையாகி விட்டது.

அதாவது, " ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி டெல்லி தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி பெற்று மோசடி செய்ததாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட மற்றும் போக்குவரத்து செலவுக்காக பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. பவர் ஸ்டார் சீனிவாசன் மீது அதேபோல் ஆறு மோசடி வழக்கு சென்னையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது, "பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்பு இருந்ததாக மத்திய குற்றப்பிரிவு (சென்னை) 2013 ஏப்ரல் 26 அன்று சீனிவாசனை கைது செய்தது. அதேபோல், ராமநாதபுரம், தேவி பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு, இறால் பண்ணை மற்றும் உப்பளத் தொழிலை மேம்படுத்த 15 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ஆவணக் கட்டணமாக 14 லட்சம் ரூபாய் பெற்று, போலி காசோலை வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. 

கடன் வழங்கப்படவில்லை, மேலும் பணம் திருப்பி அளிக்கப்படவில்லை.

இதையடுத்து முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் சீனிவாசன் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், 2023 டிசம்பரில் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, மார்ச் 20 அன்று மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. 

ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதனுக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 50 லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்று ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, சீனிவாசன் 2013-ல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது புகார் பட்டியலைப் பார்த்த இணையவாசிகள், இவர் பவர் ஸ்டாரா, இல்லை மோசடி ஸ்டாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .