Editorial / 2025 நவம்பர் 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். புதுடில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுடில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம் திகதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட, 13 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியதும், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவன் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் அவன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், அவனது வீட்டுக்கு பொலிஸார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் வௌ்ளிக்கிழமை (14) நள்ளிரவு சென்றனர். பின்னர், டாக்டர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது. மேலும், டெலிகிராம் மூலம் தனது பாகிஸ்தான் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்ட வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களையும் சோதித்து இருக்கிறான்.
புதுடில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகள் மூவரில் டாக்டர் உமர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணராக இருந்து இருக்கிறான். அதனால் தான் அவன் தனது வீட்டில் ஒரு ஆய்வகத்தை அமைத்து இருக்கிறான் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நவம்பர் 8ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடந்த சோதனையின் போது, பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .