2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பிரதமரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

Freelancer   / 2026 ஜனவரி 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உழைப்புக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

நாம் அனைவரும் இயற்கையின் படைப்புக்களே. இயற்கையை மீறி எம்மால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது. இயற்கையினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதங்களுக்குக் கைமாறு செய்வது மிக உயர்ந்த மனிதப் பண்பாகும்.

நாடு என்ற ரீதியில் நாம் இன்று ஒரு தீர்க்கமான மாற்றத்தின் விளிம்பில் நிற்கின்றோம். கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஊடாக, மனப்பாங்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தேசத்தை ஒரு
'மறுமலர்ச்சி யுகத்தை' நோக்கி இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. சவால்கள் நிறைந்ததாக இருப்பினும், ஒரு அரசாங்கமாக நாம் அந்தப் பொறுப்பை ஏற்று, தேசத்தின் பரிணாம வளர்ச்சிக்கான புதிய வருடத்தை உறுதியுடன் ஆரம்பித்துள்ளோம்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அதேபோல், நாட்டின் சுபீட்சத்துக்காக நாம் மேற்கொள்ளும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பது போன்றதே. இந்தத் தருணத்தில், இயற்கையைப் போற்றி நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, வளமான கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகின்றது.

ஒருவரையொருவர் மதித்தல், பிற மத மற்றும் கலாச்சார உரிமைகளைப் பேணுதல் போன்ற உயரிய பண்புகளுடன், நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.

தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X