2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

“பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி”

S.Renuka   / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1ஆம் திகதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2ஆம் திகதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் இராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார்.

            சபாநாயகர் ஓம் பிர்லா
.........................................

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரு தினங்களாக மக்களவையில் கடும் அமளி நீடித்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று புதன்கிழமை (04) மோடி பதிலுரை ஆற்றவில்லை.

இதே போல், இன்று வியாழக்கிழமை (05) காலையும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

அமளிக்கு மத்தியில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளிக்காமலேயே குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா தீர்மானத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

இது தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், “நேற்று புதன்கிழமை (04) மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பேச இருந்தார். ஆனால், அவர் நேற்று அவைக்கு வரவில்லை.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி மூத்த மந்திரிகளின் மேஜைக்கு அருகே சென்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிரதமர் மோடியை தாக்க சதி திட்டம் தீட்டினர். எனவே, நான்தான் அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.


ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் மக்களவைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மேலும் 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X