2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’பாதுகாப்புக் கவசங்களுக்கு நாட்டில் பற்றாக்குறை’

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் ஆபத்தான நேரத்திலும் சவால்மிக்க தருணத்திலும் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அலுவலகச் சபையினர் உள்ளடங்களாக சேவை நிமித்தம் கடமையாற்றுபவர்களுக்குத் தேவையான முகக் கவசத்திலிருந்து தனியார் பாதுகாப்பு உபகரணங்கள் வரை அனைத்துக்கும் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் சமூகத்துக்குள் ஏற்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியினால் (ஜே.வி.பி) அபிப்பராயங்கள் சில முன்வைக்கப்பட்டுள்ளன. அதிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த பாரிய நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்து, உலக வங்கியில் 128.4 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ள தருணத்தில், சுகாதாரப் பிரிவினருக்கு போதுமானளவு பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்கியுள்ளமை கவலைக்குறிய விடயமாகும் என்றும் எனவே, சுகாதாரப் பிரிவு மற்றும் கொரோனா ஒழிப்பில் ஈடுபடும் சகலரினதும் உயிரைப்  பாதுகாக்க, அந்தந்தப் பிரிவுகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாம்  கோரிக்கை விடுப்பதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.

“வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 189 பேரென உத்தியோகப்பூரவ்மாக அறிவிக்கப்பட்டாலும், இதனை விட எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சுகாதார நிபுணர்களின் எண்ணப்பாடாகவுள்ளது. எனவே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வேகமாக அடையாளம் காண்பதற்குரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதற்காக நிபுணர்கள் சுட்டிக்காட்டும் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“மேலும், நீண்டகால மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், மருந்துகளைக் கொள்வனவு செய்ய முடியாதிருப்பதால்,  மருந்தகங்களை திறக்கும் வேலைத்திட்டம் மற்றும் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வேலைத்திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது” என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பல மருந்தகங்களில் பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, மருந்துகளைப் பற்றாக்குறையின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை மக்களுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை பயனற்றதாகத் தெரிகின்றது என்றும் இதற்கு, நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களைச் சுற்றி செயற்படும் மாபியா குழுக்கள், பொருளாதார நிலையங்களைத் திறந்து மூடுவதற்கான ஒழுங்கற்ற பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதே காரணமென்றும், ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இந்தச் சவாலை சாளிக்க இன்னும் தாமதமாகாமல் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னெடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தீவிர ஆதரவை வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயாராகவுள்ளதென, அக்கட்சி  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .