2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’புதிய அரசமைப்பால் நாட்டுக்குள் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்’

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ், சி.அமிர்தப்பிரியா

 

ஐக்கியத் தேசியக் கட்சியின் அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  வழங்கிவரும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், ஒரே நாளில், ஐ.தே.கவின் அரசாங்கம் கவிழுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கூட்டமைப்பின் ஆதரவில்லாது, ஐ.தே.கவால் ஒருபோதும் பாதீட்டை நிறைவேற்ற முடியாதெனவும் தெரிவித்தது.

 

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, புதிய அரசமைப்பால் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும் என்றும், இதனால், நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு ஏற்படாதென்றும் கூறினார்.  

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி, புதிய அரசமைப்புத் தொடர்பான அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், குறைந்தது மூன்று நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அறிக்கைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்றார். 

புதிய அரசமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அறிக்கையே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், நிபுணர் குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றம் சமர்ப்பிக்க முடியாதென்றும் கூறிய அவர், ஆகவே இது, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் முரணானதெனவும் தெரிவித்தார். 

இந்தப் புதிய அரசமைப்பில் என்ன இருக்கின்றதென, ஜயம்பதி விக்கிரமரத்னவுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் பிரதமருக்கும் அவருடன் இருக்கும் சில சகாக்களுக்கும் மட்டுமே தெரியுமென்றும் கூறிய ஜீ.எல், நாட்டை ஆட்சி செய்வது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனா எனவும் கேள்வி எழுப்பினார்.  

அத்துடன், அரசாங்கத்தால் சுயாதீனமாக இயங்க முடியாதெனவும், விரும்பியோ விரும்பாமலோ, கூட்டமைப்பின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தற்போதிருக்கும் அரசமைப்பை, முற்றிலுமாகத் திருத்தி, புதிய அரசமைப்பைக் கொண்டுவரக்கூடிய தேவை இருப்பதாக முன்வைக்கப்படும் வாதங்களை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .