Freelancer / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
2014 இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி,
“இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. எனவே, அந்த தடையை நீக்க வேண்டும்.” என்று வாதிட்டார்.
மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர்,
“விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 2024 ஆம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014 இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல. மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல. டில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளது.” என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். (a)
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago