2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘புலித் தடையை நீக்க நீதிமன்றம் போகலாம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி உரையாடி, அதன் மூலமாக அரசியல் செய்வதை விட, புலிகள் மீது இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, நீதிமன்றத்துக்குச் செல்ல முடியுமென, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், ஆலோசனை வழங்கியுள்ளார். அவ்வாறு தடை நீக்கப்படுமாயின், இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இருக்கின்ற முக்கியமான தடை, கணிசமானளவு தளருமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு டவர் அரங்கில், நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி, எவரும் வழக்குத் தொடரலாம் எனவும், வாதங்களை முன்வைக்கலாம் எனவும் தெரிவித்த அமைச்சர் மனோ, அதற்கான உரிமை, அனைவருக்கும் உண்டு எனவும் குறிப்பிட்டார். இலங்கையில், புலிகள் ஆயுதப் போரில் இப்போது ஈடுபடவில்லை எனவும், 12,000 முன்னாள் போராளிகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் ஜே.வி.பியைப் போன்று, இன்று ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டார்கள் என்று வாதிட முடியும் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “புலிகளின் தலைவருக்குச் சமானமாகத் தம்மை இன்று உருவகித்துக் கொண்டு, புலிகளைப் பற்றி மறைமுகமாகப் பேசி பேசியே, அரசியல் செய்யும் தமிழ்த் தலைவர்கள், முதலில் இந்தப் புலித் தடையை நீக்க, தம் சட்ட அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதை எவரும் இதுவரை செய்ய முன்வரவில்லை. உண்மையில், புலிகளைப் பற்றி மக்கள் மன்றத்தில் பேசிய அப்பாவிப் பெண் எம்.பி விஜயகலாவுக்கு இருக்கும் தைரியம், இன்று சட்டத்தரணிகளாகவுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு இல்லையோ என்றும், முன்னாள் போராளிகளை முன்னிலைப்படுத்தி வழக்குப் பேசினால், அந்த முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலில் எழுச்சி பெற்று விடுவார்கள் என எவரும் அஞ்சுகிறார்களோ என்றும், எனக்கு இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது” எனக் குறிப்பிட்டார்.

 

பெரும்பான்மையினத் தரப்பில், புலிகள் என்ற பெயர், இன்னமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவர்கள் உடன்படுவதை, அவ்வச்சமே தடுத்து நிறுத்துகிறது எனவும், எனவே, புலிகளைப் பற்றிய அபிப்பிராயத்தை மாற்ற, சட்டத்தரணிகளாகவுள்ள அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் எனக் குறினார்.

“இன்று, புலிகள் ஆயுதப் போரில் இல்லை என்பதைக் கூறி, ஜே.வி.பியைப் போன்று, ஜனநாயக வழிமுறைக்கு வந்துவிட்ட இலங்கையில் உள்ள முன்னாள் போராளிகளை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். ஜே.வி.பியைப் போன்று தமிழ் இளைஞர்கள், அன்று ஆயுதம் தூக்கியதன் பின்னணியில் இருந்த காரணத்தை, தர்க்கரீதியாக எடுத்துக்கூற வேண்டும். 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசமைப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, ‘ட்ரயல்-அட்-பார்’ வழக்குக்குச் சமானமாக, இந்த வழக்கையும் கொண்டு செல்ல வேண்டும்” என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .