2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு விசாரணை நிறைவு

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு விசாரணை, நேற்றுத் திங்கட்கிழமை (09), நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இடம்பெற்றுவந்தது. பிரதிவாதிகளில் தலைமறைவாகியுள்ள கலகொட என்பவரைத் தவிர ஏனைய சகல பிரதிவாதிகளும் சாட்சியமளித்துள்ளமையால், வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த வழக்கின் சாட்சி விசாரணை, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர்; மாதம் 12ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு, 52 நாட்கள் இடம்பெற்றன.

வழக்கில், முறைப்பாட்டாளர் சார்பில் சாட்சியாளர்கள் 40 பேர் முன்னிலைப்படுத்தப்பட்டனர், 86 சாட்சிப் பொருட்களும், 126 ஆவணங்களும் முன்வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்புச் சாட்சித் தொகுப்புரைகளை, எதிர்வரும் 25ஆம் திகதியன்று ஆற்றுமாறு நீதிபதிகள் குழு, இருதரப்புச் சட்டத்தரணிகளிடமும் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கை விசேட வழக்காகக் கவனத்தில் கொண்டு விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நீதிபதிகளான சிரான் குணதிலக்க (தலைவர்), பத்மினி ரணவக்க, மொராயஸ் ஆகியோரின் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதியன்று இடம்பெற்ற கொலன்னாவை நகர சபைக்கான தேர்தலின் போது, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X