2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிறப்பு முதல் பிரியங்கா வரை...

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான நளினி எழுதிய சுயசரிதை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட உள்ளது என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், நளினி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு வழியில் நீதிதுறையின் மூலம் அவர் போராடியும் வருகிறார். இந்த நிலையில் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார் நளினி.

500 பக்கங்களை கொண்ட இந்த சுயசரிதையில் தனது குழந்தைப் பருவம் தொடங்கி, முருகனுடன் காதல் ஏற்பட்டது, அவரை திருமணம் செய்துகொண்டது, கருவுற்றது, குழந்தை பிறந்தது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது, பெரும்புதூரில் நடந்தது என்ன? கைது செய்யப்பட்டு, கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டது, சிறைக் கொடுமைகள், தொடர்ந்து 25 ஆண்டுகளாக சிறைவாசம் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அவ்வப்போது தனது மகளுக்கு எழுதும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்களை நளினி எழுதியுள்ளார். இந்த சுயசரிதையின் இறுதி அத்தியாயத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு பிரியங்கா காந்திக்கும், நளினிக்கும் இடையே நடைபெற்ற சிறப்பு சந்திப்பு பற்றியும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடபழனியில் வைத்தே இந்த சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்; உள்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .