2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்போம்: சீன தூதுக் குழு உறுதி

Editorial   / 2025 நவம்பர் 06 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பணிப்பாளருமான கௌரவ வாங் குவோஷெங்   தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (06) கலந்துரையாடலொன்றை நடத்தினர்.

இலங்கை பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன், இத்தூதுக் குழுவினர்   பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியை சந்தித்திருந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் சீனாவின் உறுதிப்பாட்டை தூதுக் குழுவினர் மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையில் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களைத் தாம் ஊக்கப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்   பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர,   பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) சுஜீவ சேனசிங்க, ருவன் மாப்பலகம, சுஜித் சஞ்சய பெரேரா, சதுர கலப்பதி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவு இந்தக் குழுவின் விஜயத்தின் மூலம் வலுப்படுவதாகக் குறிப்பிட்டார். சீனா இலங்கைக்குப் பல துறைகளில் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றமையை நினைவுகூர்ந்த அவர்,  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சீன தூதுக் குழுவின் தலைவர்  வாங் குவோஷெங், சீனாவுக்கு மிகவும் நெருக்கமான நட்பைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும், சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சீன நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தூதுக் குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவுக்கு அழைத்தமைக்கு நன்றி தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்   பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, இலங்கையில் புதிய உற்பத்தித் தொழிற்சாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த  பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் (சட்டத்தரணி) சஜீவ சேனசிங்க ஆகியோர் இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

உயர்மட்ட சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பிரதிப் பணிப்பாளருமான கௌரவ ஃபு ஜிபாங், சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உறுப்பினர் கௌரவ மாவோ டிக்ஸி, சீனத் தூதுக் குழுவின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் பணிப்பாளர் லியூ வாசிங், சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் பொருளாதார விவகார குழு அலுவலகத்தின் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவின் பணிப்பாளர் ஜாங் ஜின்ஜி, இலங்கைக்கான சீனத் தூதுவர் கௌரவ கீ சென்ஹொங் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் சந்திப்பு நிறைவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X