2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மனித உரிமைகளை மீறினார் மேர்வின்: நட்டஈடு செலுத்துமாறு உத்தரவு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகளை மீறினார் என்ற குற்றத்துக்காக, கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவருக்கு, நட்டஈடு செலுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் அரசாங்கத்துக்கும், கொழும்பு உயர் நீதிமன்றம், நேற்றுப் புதன்கிழமை (30) உத்தரவு பிறப்பித்தது.

  கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த அசித்த நாணாயக்கார என்ற பொதுமகனின் வீட்டைச் சுற்றியுள்ள மதில் மற்றும் சில கட்டடங்கள் உடைக்கப்பட்டதாக, கடந்த 2010ஆம் ஆண்டில், முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.  

இது தொடர்பான வழக்கு, மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த பொதுமகனின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதென, மேர்வின் சில்வா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  

இவ்விடயத்தைக் கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், மேர்வின் சில்வாவின் சொந்தப் பணத்திலிருந்து 4 இலட்சம் ரூபாயினை, குறித்த பொதுமகனுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என்று, உத்தரவிட்டது. அத்துடன், கிரிபத்கொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினாலும், 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  

அதுமாத்திரமன்றி, அரசாங்கமும், அந்நபருக்கு 1 இலட்சம் ரூபாயினை, நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும், நதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.  

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில், முழுமையான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .