2025 நவம்பர் 01, சனிக்கிழமை

மர்பநபரின் புகைப்படம் தொடர்பில் விசாரணை

Thipaan   / 2017 ஜூலை 28 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை இடம்பெற்ற தினத்தன்று, அவருடைய வாகனத்தைப் பின்தொடர்ந்த நபரொருவரின் புகைப்படம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (27) அறிவித்தார். 

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம்

 ட்ரொஸ்கி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.  

மேலும், சம்பவதினத்தன்று, அந்தப் பகுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க கோரினார். 

முன்னாள் சட்ட வைத்த அதிகாரி ஆனந்த சமரசேகர மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை, இலங்கை மருத்துவ சபையின் சட்டத்தரணி, மன்றில் சமர்ப்பித்தார். 

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 2017.06.31ஆம் திகதி முதல் ஆறுமாதங்களுக்கு, மருத்துவவியல் பயிற்சிகளை மேற்கொள்ள ஆனந்த சமரசேகரவுக்கு, மருத்துவ சபை இடைக்காலத் தடை விதித்துள்ளதாகவும், ஏனைய இரு வைத்தியர்களும் குற்றமற்றவர்கள் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, தாஜுதீனின் சடலம், 2ஆவது தடவை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அது விபத்து அல்ல படுகொலை எனத் தெரியவந்தது எனக் குறிப்பிட்ட தாஜுதீனின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிழையான அறிக்கை வழங்கிய ஆனந்த சமரசேகரைவைக் கைதுசெய்யவேண்டும் எனக் கோரிநின்றார். 

படுகொலையொன்றுக்கு முன்னரும் பின்னரும் சதித்திட்டங்கள் இடம்பெறமுடியும் எனக் குறிப்பிட்ட அவர், இது படுகொலைக்குப் பின்னரான சதித்திட்டம் என்றும் சுட்டிக்காட்டினார். 

மருத்துவ சபையின் அறிக்கை, நேற்றைய தினமே கிடைத்துள்ளது எனத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் அதன் பின்னரே முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறினார். 

ஏற்கெனவே காலதாமதமாவதால், ஒன்று அல்லது ஒன்றரை மாதத்துக்குள் இதுதொடர்பில் அறிவிக்கவேண்டும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரலைப் பணித்த நீதவான், ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். 

தனக்கு வழங்கப்பட்ட அறிக்கையைக் கொண்டு ஆராயந்து, ஆனந்த சமரசேகரவைக் கைதுசெய்யவேண்டும் எனினி, அடுத்த அமர்வுத் தினத்துக்கு முன்னரே அறிவிப்பதாக மன்றுக்கு அறிவித்தார்.  

தாஜுதீனின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முதலாவது சந்தேகநபரான நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X