Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 20 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கள மொழி நேர்காணலொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம். ஏ. சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்ததையடுத்து , தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமிர்தலிங்கம் சகாப்தத்தின் நூலின் ஆசிரியரான கதிர் பாலசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு திறந்த மடலொன்றை எழுதியுள்ளார்.
மதிப்பிற்குரிய திரு. செல்வம் அடைக்கலநாதன் கவனத்திற்கு
திரு. சுமந்திரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறியதற்குக் காரணம் என்ன? அவர் பின்வரும் சம்பவங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் கொடுமைகளை ஆதாரமாகக்கொண்டு ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம்.
ஆயுதம் ஏந்திய அமைப்புகள் விடுதலைக்காகப் போராடியதிலும், தலைமைப் பீட வெறிபிடித்து மோதி அழிந்த ஜீவன்களை கருத்தில் கொண்டிருக்கலாம். ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறமுன்னரே, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களே -- தந்தை செல்வா, அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் முதலிய பெருந் தலைவர்கள் -- தவறு என்று ஆயுதப் போராட்ட ஆரம்பத்திலேயே உலகறியச் சொல்லியிருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அன்றைய தமிழ் அரசுத் தலைவர்களை தம் பக்கம் அணைத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். முடியவில்லை. கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை மட்டும் அமிர்தலிங்கம் அவர்களுடன் ஒத்துப் போகாததால் இளைஞர் பக்கம் மெல்லிதாய் தலையாட்டினார். ஆயுதம் ஏந்திய அமைப்புகள் கொன்ற தமிழ் அரசுக் கட்சி தலைவர்களையும், பொது மக்களையும் கருத்தில் எடுத்தும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மொத்தம் 16 தமிழ் அரசுக் கட்சி தலைவர்கள் பிரமுகர்களை கொன்றுள்ளார்கள். பெயர்கள் அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் பதிவாகியுள்ளது.
சுடலையிலும், வீதியோரமும் கொன்று எறிந்த பொதுமக்களை எண்ணியும்,தந்திக் கம்பங்களில் கட்டிச் சுட்டுக் கொன்ற பொது மக்களை எண்ணியும் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சோத்துப் பார்சல் கொடுத்த மக்களின் வீடுகளுள் புகுந்து, வீட்டாரைக் கட்டிவைத்து விட்டு,நகை பணம் பொருட்கள் கொள்ளை அடித்ததையும் கருத்தில் கொண்டிருக்கலாம். இன்று வடக்கு மாகாணம், ஆயதம் ஏந்திய இழைஞர் முன்னெடுத்த போராட்டம் கொண்டு வந்த கொடிய யுத்த பேரழிவால் கண்ணீர் சொரிகின்றது. பல பகுதிகள் சுடுகாடு போற் காட்சிதருகின்றன.
தலைவன் இல்லாது தவிக்கும் குடும்பங்கள் ஆயிரக் கணக்கில். தந்தையை இழந்து கண்ணீர் கொட்டும் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில். அனாதைகள் ஆக்கப்பட்டு அல்லலுறும் குழந்தைகள் ஆயிரக் கணக்கில். வாழ்ந்த மனைகளை இழந்து தவிப்போர் ஆயிரக் கணக்கில். ஆங்காங்கிருந்த கைத்தொழில் நிலையங்கள் எதுவும் இன்றில்லை. கலாசாரம் சீரழிந்து உயர் பண்பாட்டில் மண் அள்ளிப்போட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் உயிர்நிலையான கல்வி பாதாளத்துள் தள்ளப்பட்டுள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ கொடுமைகளை வடமாகாணம் தலைமேல் சுமந்துநின்று கண்ணீர்வடிக்கின்றது.
இவற்றின் மத்தியிலே ஆயுதம் ஏந்திய பலர் கோடி சீமான்களாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் பரந்து வாழ்கின்றனர். இவையெல்லாம் மனச்சாட்சியை உறுத்தியதால் சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம்.
ராஜிவ் காந்தி கொலை காரணமாக இந்திய ஆதரவை இழந்தமையை கருத்தில் எடுத்தும் ஆயதப் போராட்டம் தவறு என்று கூறியிருக்கலாம். என்றும், இந்திய ஆதரவு இல்லாமல் எமக்கு அற்பமாவது விடுலை கிடைக்குமா?
திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு. நீங்கள் கூறுவது போல உலகளாவிய ரீதியில் எங்கள் பிரச்சினையை முதன் முதலில் பதிந்தவர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் அல்ல. அதனை செய்தவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள். தில்லி பாராளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி அவர்கள் 1983 இனக் கலவரத்தை இன அழிப்பு என்று பதிவு செய்தார். அதுவே எமது பிரச்சினை சார்ர்ந்து உலகறிய வைத்த முதலாவது பதிவு. அதன் பின்னணியிலே அமரர் அமிர்தலிங்கம் இருந்தார். அவரே உலக நாடுகளுக்கு – இந்தியா, சுவிற்சலாந்து, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா,அவுஸ்திரேலிய நாடுகளுக்கு -- தமிழர் பிரச்சினையை முதன்முதலில் எடுத்துச் சென்றவர். ஆயுதப் போராட்டத்தின் காரணமாகத்தான் இனப் பிரச்சினை சார்ந்த விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடிந்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியல்ல. சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம் தொடக்கம் இந்தப் பிரச்சினை வரலாறு தொடர் கதையாய் நீண்டுவருகின்றது. நீங்கள் கூறுவது போல பொது மக்கள் போராளிகள் ஒட்டுமொத்தமாக உயிரை அர்ப்பணித்ததற்காக சரி என்று சொல்ல வேண்டுமா?
தமிழ் அரசுக் கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம்,ஆலாலசுந்தரம் ஆகியோரை உங்கள் இயக்கம் கொன்றது சரி என்று சொல்கிறீர்களா? அல்லது உங்கள் தவைர் சபாரத்தினத்தை புகையிலைத் தோட்டத்தில் இருகை கூப்பிக் கும்பிடக் கும்பிடக் மாத்தையா கொன்றது சரியென்று சொல்கிறீர்களா? இப்படி எத்தனை எத்தனை கொலைகள்? இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டும் ஆயுதப் போராட்டம் தவறு என்று சுமந்திரன் கூறியிருக்கலாம். வல்லமையுள்ள தமிழ் அரசியல் தலைவர்களை கொன்று ஒழித்ததன் பின்னர் தமிழர் பிரச்சினையை உலகிற்குச் சொல்லக்கூடிய தனித்த தலைவராக சுமந்திரன் திகழ்கின்றார். அவரை ஒழித்தால் அரசியல் அரங்கிலே தமிழருக்காக வாதாட யார் இருக்கிறார்? ஈழத் தமிழ் மக்கள் செய்த தவத்தால் கிடைத்த சட்ட மேதை சுமந்திரன். அவரை சீண்டாதீர்கள். மக்கள் அவர் பக்கம் இருக்கின்றார்கள்.
ஆயுதப் போராட்டத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. தியாகங்கள் நிறைந்த புனிதமான வீரம்நிறைந்த பக்கத்தைத் தவிர்த்து, எதிர்ப்பக்கத்தையே சுமந்திரன் தனது பேசு பொருளில் எடுத்துள்ளார். தயவு செய்து உங்கள் ஆதரவை அவருக்கு வழங்குங்கள். அரசியல் அநாதைகளாகத் தவிக்கும் தமிழ் மக்களுக்கு அது அளப்பரிய நன்மை பயக்கும்.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025