2025 மே 21, புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்ட மாட்டேன்

Kogilavani   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி செயலகத்திலிருந்து மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்காக முன்னாள் ஜனாதிபதியை நான் குற்றஞ்சாட்ட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை வடிவமைக்கவும் அதை நிறைவேற்றவும், நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிரணியை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற, வரவு - செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,

சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சரியான தருணமிதுவெனச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி, 'நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களும் நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட வேண்டுமென தனிப்பட்டரீதியில் நான் எண்ணுகிறேன்' என்றார். அத்தோடு, ஜனாதிபதியாகப் பதவியேற்று, ஏறத்தாழ ஒரு வருடம் கடந்துவிட்டது என்பதையும் அவர் ஞாபகமூட்டினார். கடந்த நாடாளுமன்றத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்பட்ட போதிலும், பயன்மிகு அரசியல் சீர்திருத்தங்களை அவ்வரசாங்கம்

நடைமுறைப்படுத்தியிருக்கவில்லை என்பதை மீள ஞாபகமூட்டிய அவர், அந்தப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தைச் சமர்ப்பித்து, நிறைவேற்றதிகாரத்தின் அதிகாரங்களை அதிகரித்ததாகத் தெரிவித்தார்.

தன் சார்பான செலவுகளிலும், ஒழுக்கத்தைக் கொண்டுவர முடிந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். '200 பேருக்கும் அதிகமான தூதுக்குழுவுடன், தனி விமானத்தில் நான் செல்வதில்லை' எனத் தெரிவித்த அவர், மரண வீடுகளுக்கு அனுப்பப்படும் மலர் வளையங்களில் கூட ஊழல்

மேற்கொள்ளப்படும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர, தன்னால் முடிந்ததாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதியை  நான் குற்றஞ்சாட்ட மாட்டேன். எனினும், அவருடைய பணியாட் தொகுதியின் செயற்பாடுகளை அவர் தேடிப் பார்க்காமையினால் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்தன என்றார்.

இலங்கை மீதான பார்வையை, சர்வதேச சமூகம் மாற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், பல நாடுகள், இலங்கையை நம்பத்தகுந்த நண்பனாக வரவேற்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, இலங்கை மீன்களின் இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள தடையை நீக்குவதற்கு, அவ்வொன்றியத்துடன் மத்தியஸ்தத்தில் ஈடுபடுவதற்கு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோன் சம்மதித்துள்ளதாகவும், இலங்கைக்கான நிதியுதவிகளுக்கு அவர் சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதியே பங்கேற்றி உரையாற்றியமை ஒரு முன்னுதாரமாகும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .