2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'யுத்தத்தில் தோற்றவர்கள் மறக்கவில்லை; வெற்றியாளர்களுக்கு நினைவில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யுத்தத்தில் தோற்றவர்கள் ஒரு கொள்கையை பின்பற்றுகையில் யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள் அதனை மறப்பது வருத்தத்திற்குரியது” என, தெரிவித்துள்ள  துறைமுகங்கள் , கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, “நாம் அதனை மறப்பது தவறானதாகும்” என்றும் கூறியுள்ளார்.

அத்துடன்,ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிப்புற்ற மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியான பின்னரே  அச்சமின்றி மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்வதாகவும், “யுத்தத்தில் தோல்வியுற்றவர்கள் அதனை நினைவில் வைத்துக்கொண்டுள்ள போதிலும் யுத்தத்தில் வெற்றிக்கொண்டவர்கள் அதனை மறந்துச் செயற்படுவது மாபெரும் அழிவுக்கு வழிகோலும்” என்ம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் கத்தோலிக்க சங்கத்தினால் ஏற்பாடுச் செய்யப்பட்ட நத்தார் கரோல் கீதங்கள் நிகழ்வில், அண்மையில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறியுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்தநிகழ்வில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,  “30 ஆண்டுகளாக யுத்தத்துக்கு முகங்கொடுத்தோம். அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அன்றிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காரணமாக இந்நாட்டில் யுத்தத்தை நிறைவுச் செய்து சமாதானமான சூழல் ஏற்படுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டில் நாம் ஈட்டிய யுத்த வெற்றியை ஐந்து ஆண்டுகளில் மக்கள் மறந்துவிட்டார்கள். அதுவே கசப்பான உண்மை நிலை. நாட்டை வெற்றியடையச் செய்த தலைவனை தோற்கடித்து நல்லாட்சி எனும் அரசாங்கத்தை கொண்டுவந்தார்கள்.  

அவ்வரசாங்கத்தில் ஏற்பட்ட அழிவுகளை நான் கூறவேண்டியதில்லை.  இச்சுதந்திரத்தை ஏற்படுத்தி 10 ஆண்டுகளுக்குள் ஏப்ரல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. முதலாவது குண்டு தாக்குதல் துறைமுக அதிகார சபையின்  மதில் சுவருக்கு அருகாமையில் உள்ள புனித. அந்தோனியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது நாம் அனைவரும் அறிந்த விடயம். அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உடனடியாக வருமாறு கூறினார். நானும் அக்கணமே சென்றேன். அங்கே அவர் மிகவும் கவலையுடன் இருந்தார். கோயில்களை மற்றும் காயமடைந்தவர்களை பார்வையிடுவதற்கு உடனே செல்ல வேண்டுமென கூறினார். 

இப்பயணத்தை அனுமதிக்க இயலாதென அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். அது மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.  நானும் அப்பிரச்சினையில் தலையிட்டேன். இன்னுமொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுமென உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  

செய்வதற்கு ஒன்றும் இல்லாமையால் நீர்கொழும்புக்கேனும் செல்வோம் என அவர் முடிவெடுத்தார்.  அவரது மனதில் பிரிதொரு காரணி மறைந்திருந்தது. கொச்சிகடை கோயிலுக்கு  அருகிலுள்ள பாதையில் செல்லும் பொழுது கோயிலுக்குச் செல்வோம் என சடுதியாக பணித்தார். 

உங்களின் பாதுகாப்பை எம்மால் உறுதிச் செய்ய இயலாது , எனவே நீங்கள் செல்வதை எம்மால் அனுமதிக்க இயலாதென அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவது என் காதில் விழுந்தது. இந்நாட்டு மக்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கையில் எனக்கென்ன பாதுகாப்பு வேண்டும்  நான் செல்லவில்லையாயின் இரவில்  என்னால் நித்திரைகொள்ள இயலாதென மஹிந்த கூறினார். 

எனவே, உடனடியாக வாகனத்தை திருப்புங்கள் என்றார். அச்சமயம் முன்னாள் இருந்த பாதுகாப்பு அதிகாரி என்ன செய்வதென்று என்னிடம் வினவினார் அதற்கு நான் செய்வதற்கொன்றுமில்லை அவரது விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என்றேன். 

ஏனெனில் அவருடைய செயற்பாட்டை நிறுத்த முடியாத நிலையில் நாம் இருந்தோம். கோயிலுக்குள் சென்றவுடன் எம்முடைய குருவானவர் மிகவும் கவலையுடன் , கண்ணீர்மல்க காணப்பட்டமை என் நினைவிலுள்ளது. 

என்ன நடந்துள்ளதென நான் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினவினேன்.  குண்டுதாரியின் தலையை காட்டி தற்கொலை குண்டு தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்கள். 

நாம்  இவ்விடத்தை விட்டு உடனடியாக செல்ல வேண்டுமென நான் மஹிந்தவின் காதில் கூறினேன். அவ்விடத்துக்கு  செல்லும் வரையில் நடந்த தாக்குதல் விவரம் தொடர்பில் நாம் அறிந்திருக்கவில்லை.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்நாட்டில் மதவழிப்பாடுகளில் ஈடுப்படுவோர் அங்கு செல்ல முடியாதிருந்தனர். இதுவொரு கசப்பான உண்மையாகும். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியதன் பின்னர் தான் கோயில்கள் நிரம்ப ஆரம்பித்தன.  

இவ்வெற்றியின் ஊடாக தமக்கான பாதுகாப்பு கிடைத்துள்ளதென மக்கள் நம்பினார்கள். இதனை மறக்க வேண்டாமென நான் இந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்நாட்டு மக்கள் அனைத்தையும் விரைவாக மறந்துவிடுவார்கள். 

பிரபாகரனின் மரணத்தை மறக்காத மக்கள் இன்னும் உள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யுத்தத்தில் தோல்வியுற்றவர்கள் அதனை நினைவில்கொண்டுள்ளார்கள். வெற்றிக் கொண்டவர்கள் மறந்துவிட்டார்கள். இது வருத்தத்திற்குரிய காரணியாகும். 

எதுஎவ்வாறாயினும் உண்மை வெற்றிக்கொண்டுள்ளது. இன்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார். இன்று இந்நாட்டு மக்களுக்கு தேவையானவை கிடைக்கின்றன.

அரிசி பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாம் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலை வேளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தார் என்பதை முகப்புத்தகத்தில் கண்டோம். 

நாம் செயற்படும் அரசாங்கமாகும். செயற்படும் தலைவர்களையே பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். நாட்டை அபிவிருத்திச் செய்யும் , பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் தலைவர்களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். 

பிரதமரம், ஜனாதிபதியும் இந்நாட்டு மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்” என்றார்.

 இந்த நிகழ்வில் துறைமுகங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் அத்துல ஹேவாவித்தாரன, மேலதிக முகாமைத்துவ பணிப்பாளர் உபாலி சொய்சா, கத்தோலிக்க சங்கத்தின் உறுப்பினர்கள், துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .