2025 மே 03, சனிக்கிழமை

ரவிக்கும் மகளுக்கும் சி.ஐ.டி அழைப்பு

Editorial   / 2019 மே 31 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரோஷினி விஜயராஜ்   

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையிலே ​பொய்யான ஆவணங்களைத் தயாரித்து, பொய்ச் சாட்சியமளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.  

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜராகியிருந்த, சிரேஷ்ட அரச சட்டத்தரணி லக்மினி ஹிரிஹாகம, இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தினார். “அவ்வாறு பொய்யாகச் சாட்சியமளிப்பது இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்” என நீதிமன்றத்தின் கவனத்துக்கு சிரேஷ்ட அரச சட்டத்தரணி கொண்டுவந்தார்.   

அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவருடைய மகள் ஒனெலா கருணாநாயக்க மற்றும் இன்னும் சிலரிடம் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துகொண்டு, ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவிருப்பதாக, சிரேஷ்ட அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தில் தெரிவித்தார்.   

ரவி கருணாநாயக்கவின் குடும்ப உறுப்பினருக்குரிய க்ளோபல் ட்ரான்ஸ்பொட்டேஷன் நிறுவனத்துக்கு உரிய வங்கி கணக்குகள், வருமானம் உள்ளிட்ட விவரங்களை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, பெப்ரவரி 28ஆம் திகதியன்று நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. எனினும், அந்த ஆவணத்தை வழங்காமையால், விசாரணைகள் யாவும் முழுமையாக முடங்கியுள்ளன என்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.   

ரவி கருணாநாயக்க மற்றும் அவருடைய மகள் ஒனெலா கருணாநாயக்க ஆகிய இருவரையும் ஜூன் 6 ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ஒனெலா கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டை தாக்கல் செய்யுமாறு சி​ரேஷ்ட அரச சட்டத்தரணிக்கு, நீதவான் லங்கா ஜயரத்ன கட்டளையிட்டார்.   

அத்துடன், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை ஜூலை 29ஆம் திகதியன்று நீதிமன்றத்துக்கு கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X