2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ராஜபக்‌ஷவால் கொலை ஆபத்தா? ‘வெறுமனே அரசியல் பேச்சு’

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளராக தான் இருந்த போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததெனத் தெரிவித்த கருத்துகள், வெறுமனே அரசியல் பேச்சுகள் எனவும், தனது உயிருக்கு ஆபத்து இருந்ததாக, உறுதியான தகவல்கள் எவையும் இருந்ததில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ்  அமைச்சராகப் பணியாற்றிய சிறிசேன, 2015ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அவரிடமிருந்து பிரிந்து, பொது வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தன்னையும் தனது குடும்பத்தையும் கொல்வதற்கு, ராஜபக்‌ஷ தரப்பினர் முயல்கின்றனர் என்பதை முக்கியமான பிரசாரப் பொருளாகக் கொண்டிருந்த அவர், பிரசாரங்களின் போது, குண்டுதுளைக்காத ஆடைகளை அணிந்து, கவனத்தை ஈர்த்திருந்தார். அத்தேர்தலில் வெற்றிபெற்று, ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் கூட, அக்கருத்துகளை அவர் கூறிவந்தார்.

இந்நிலையில், நேற்று வெளியான ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கிய ஜனாதிபதி சிறிசேன, அவ்வாறான நிலைமை உண்மையில் காணப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அவ்வாறான கொலை அச்சுறுத்தலை வழங்கிய ராஜபக்‌ஷவை, எவ்வாறு பிரதமராக நியமித்தார் என்று கேட்கப்பட்டபோது, “அவை, அரசியல் மேடைகளில் உளறப்பட்ட, வெறுமனே அரசியல் கதைகள்” எனத் தெரிவித்த அவர், அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சதி, “கொல்வதற்கான உண்மையான சதி முயற்சி” எனத் தெரிவித்தார்.

எனினும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷ வென்றிருந்தாலும், தானும் தனது குடும்பமும், ஆறடிக்குள் சென்றிருக்கும் என, ஜனாதிபதி சிறிசேன தெளிவாகக் கூறினாரே என மீண்டும் கேட்கப்பட்ட போது, “என்னைக் கொலை செய்வதற்கு, ராஜபக்‌ஷக்கள் முயற்சி செய்தார்கள் என்று, நம்பத்தகுந்த அறிக்கையேதும் இருக்கவில்லை. தேர்தல் பிரசார மேடைக்குள் ஒருவர் செல்லும் போது, மக்களைக் கவர்வதற்காகக் கூறும் கருத்துகள் அவை” என, ஜனாதிபதி சிறிசேன பதிலளித்தார். அப்பதிலை அவர் வழங்கிய பின்னர், நக்கலாகச் சிரித்தார் என, அப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டார்.

எனினும், பிரசாரத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் என ஜனாதிபதி சிறிசேன குறிப்பிட்டாலும், ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னரும், அக்கருத்துகளை வெளியிட்டிருந்தார். உதாரணமாக, 2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி, வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில், “நானும் என்னுடைய பிள்ளைகளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக, ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, இரவு நேரத்தில், குருநாகலையில் உள்ள எனது நண்பனொருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியுற்றிருந்தால், என்னைச் சிறையிலடைப்பதற்கும் எனது குடும்பத்தினரை அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

“அதேபோல், தேர்தல் பெறுபேறுகள் திசை மாறிச் சென்றிருந்தால், நானும் எனது குடும்பமும், இந்நேரம் உயிரோடு இருந்திருப்போமா எனத் தெரியவில்லை. அது தான் மஹிந்தவின் ஜனநாயகம். அது எனக்கு நன்றாகத் தெரியும். இவர்கள் வெற்றிபெற்று, நான் தோல்வியடைந்திருந்தால், இந்நேரம் பலர் கொல்லப்பட்டு, பலரது கைகால்கள் உடைக்கப்பட்டிருப்பதுடன், பலர் சிறைக்கும் சென்றிருப்பர்” எனத் தெரிவித்திருந்தார் என்பதை ஞாபகப்படுத்தத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .