2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில் களுபஹன தோட்ட மக்கள் திரும்பினர்

Kanagaraj   / 2016 மே 30 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேனகா மூக்காண்டி

புளத்கொஹுபிட்டிய, களுபஹன தோட்டத்தில் மண்சரிவுக்கு உள்ளான மக்கள், தற்காலிகமாகத் தங்கியிருந்த ஸ்ரீ சீலானந்தா மகா வித்தியாலயத்தில் இருந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைத்துச்செல்லப்பட்டு, எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், மீண்டும் அத்தோட்டத்திலேயே குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரு சிலர் மாத்திரம், களுபஹன தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர், மேற்படி தோட்டத்தில் வெற்றிடமாக உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 17ஆம் திகதி இரவு, குறித்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 16 பேர் உயிருடன் புதையுண்டனர். இச்சம்பவத்தை அடுத்து, அத்தோட்டத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமானோர் அங்கிருந்து அகற்றப்பட்டு, மேற்படி சீலானந்தா மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, பாடசாலையிலுள்ள மக்களை அகற்றுமாறு மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களை அடுத்து, அங்கிருந்த மக்கள், பலவந்தமான முறையில் நேற்று அகற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர், களுபஹன தமிழ் மகா வித்தியாலயத்திலும், ஏனையோர், களுபஹன தோட்டத்திலுள்ள வெற்று வீடுகள் சிலவற்றிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவால் இடம்பெயர்ந்த மக்களுக்காகக் கையளிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கொட்டில்கள், இதுவரையில் நிர்மாணித்துக்கொடுக்கப்படாத நிலையிலேயே இவர்கள், மீண்டும் தோட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இக்கொட்டில்கள் இன்றைய தினத்தில் (30) நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என, தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அத்தோட்டத்திலேயே, சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதியில், வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தi-லமையில் இடம்பெறவுள்ளதாகவும், இதன்கீழ், சுமார் 100 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் தோட்ட நிர்வாகம் மேலும் கூறியது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .