2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஷஷிக்கு எதிரான வழக்கு: ஒக். 9க்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியப்பதிவு, ஒக்டோபர் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

இந்த வழக்கு, பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், நேற்று (29) எடுத்துக்  கொள்ளப்பட்ட போது, 7ஆவது சாட்சியான ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இந்திக குமார லியனகேயின் 7 வயதான மகள், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அந்தத் தகவல் தமக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், மன்றில் அறிவித்தார்.  

இதனால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் அறிவித்த அவர், 10 ஆவது சாட்சியாளரான தற்போது சுங்கத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரி, கடமை நிமித்தம் மன்றுக்கு சமுகமளிக்க முடியாது என்று, நீதிமன்றத்துக்கும் தனக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், காரணம் குறிப்பிடாததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.  

ஷஷி வீரவன்ச, போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தொடரப்பட்டது.

ஷஷி வீரவன்ச, செப்டம்பர் 6ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை வெளிநாடுசெல்லவுள்ளார் என்றும் அவருடைய கடவுச்சீட்டை விடுவிக்குமாறும், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மன்றில் கோரினார்.  

தற்போது உள்ளது இராஜதந்திரக் கடவுச்சீட்டு என்பதால், அதை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவித்த பீரிஸ், அதனைக் கொண்டு வேறு கடவுச்சீட்டு பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.  

வெளிநாடு செல்ல விஸா எடுக்கும் போது, ஏனைய கடவுச்சீட்டின் விவரம் கோரப்படும் என்பதால், நீதிமன்றத்தில் கடவுச்சீட்டு உள்ளது என்று, சான்றுப்படுத்திய ஆவணமொன்றை வழங்குமாறு வீரசிங்க கோரியமைக்கு, நீதவான் அனுமதி வழங்கினார்.

அத்துடன், 10ஆவது சாட்சிக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X