2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ஹட்டனில் ஏ.ரி.எம் மோசடிக் கும்பல்

Freelancer   / 2021 நவம்பர் 25 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்   

ஹட்டன் நகர பகுதியிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (ஏ.ரி.எம்) மூலம் பணம் எடுக்க வருபவர்களின் இலத்திரனியல் அட்டைகளைக் கொண்டு, பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்த கும்பல் ஒன்று தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக வங்கி முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

குறித்த மோசடிக் கும்பல், நீண்ட காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாத மற்றும் பணம் எடுக்க தடுமாறும் நபர்களை இலக்காக கொண்டே இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.   

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,   தானியக்க இயந்திரங்களில்  பணம் எடுப்பவர்கள் போல பாவனை செய்து நிற்கும் குறித்த மோசடிக் கும்பல், இயந்திரங்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் உதவி கேட்கும் போது, அவர்களின் அட்டையை எடுத்துக்கொண்டு தம்மிடமுள்ள செல்லுபடியாகாத அட்டையை அவர்களிடம் வழங்குகின்றனர்.  

பின்னர் வேறு வங்கி இயந்திரங்களுக்குச் சென்று, உரிய நபரின் கணக்கில் உள்ள பணத்தைத் திருடிவருவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இந்த சம்பவங்கள் தொடர்பில் ஒரு சிலர் மாத்திரம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் ஏனையவர்கள் வெட்கம் மற்றும் தங்களுடைய தவறு காரணமாக முறைபாடுகள் செய்வதில்லை என்றும் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

நேற்று முன்தினமும் இரு வங்கிகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.  

இவ்வாறான கும்பல் நாட்டில் பல பகுதிகளிலும் தானியங்கி இயந்திரங்கள் மற்றும் ஈசிகேஸ் என்ற போர்வையிலும் மோசடியில் ஈடுபட்டு வருவதால், பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வங்கி முகாமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஹட்டனில் கையகப்படுத்திக்கொண்ட இலத்திரனியல் அட்டைகள் மூலம் நாட்டின் தூர உள்ள மாவட்டங்களில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் எனவே பொதுவாக எல்லா மாவட்டங்களிம் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வங்கி முகாமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X