2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி: தன்னுயிரை மாய்த்த காதலன்

Editorial   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், பணய கைதிகள் பலரை ராணுவ நடவடிக்கை, ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் மீட்டது.

இந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள எஞ்சிய 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

இதனிடையே, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்டோபர் 7ம் தேதி ரோயி ஷலிவ் தனது காதலி மபெல் ஆடம் மற்றும் தனது நண்பர் ஹிலி சாலமோனுடன் கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த இசை நிகழ்ச்சிக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ரோயி ஷலீவ்வின் கண்முன்னே அவரது காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்டார். ஹமாஸ் ஆயுதக்குழுவின தாக்குதலில் ரோயி ஷலீவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் காதலி மபெல் ஆடல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் ரோயி ஷலீவ் நேற்று முன் தினம் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக ரோயி ஷலீவ் காதலியில் நினைவாகவே இருந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2ம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அன்றுமுதல் ரோயி ஷலீவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக்.10) டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே காருக்குள் இருந்தவாறு ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். தகவலறிந்து சென்ற பொலிஸார் ரோயி ஷலீவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக்​கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் மபெல் ஆடம் கொல்லப்பட்ட சில நாட்களில் ரோயி ஷலிவ்வின் தாயாரும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .