2026 மே 09, சனிக்கிழமை

ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

Editorial   / 2026 மே 08 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு இன்று (08) முற்பகல் மலரஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி டோ லாமை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்புடன் வரவேற்றார். இதன்போது, இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்த சிறுவர்கள், வியட்நாம் ஜனாதிபதிக்குத் தமது மரியாதையைச் செலுத்தினர். ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய வியட்நாம் ஜனாதிபதிக்கு, பாடசாலை மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்களும் இதன்போது கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள "வியட்நாம் - ஹோ சி மின் வளாகத்தை" (Vietnam-Ho Chi Minh Space) விரிவாக்கம் செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்த வியட்நாம் ஜனாதிபதி, அங்கிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பைப் பார்வையிட்டார்.

பொது நூலகத்தின் பிரதம நூலகர் வருணி கங்கபடஆரச்சியினால், ஹோ சி மின் வளாகத்தை நவீனமயப்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக வியட்நாமின் கணக்காய்வாளர் நாயகம் நெகுயென் ஹூ ன்கியா (Nguyen Huu Nghia), கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரிடம் 50,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .