2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'அறிக்கையை ஏற்குமாறு யாரும் கட்டாயப்படுத்த முடியாது'

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“நான் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டேன். நான் சுயாதீனமாக செயற்படுவதுடன், மக்களின் நலனே எனக்கு முக்கியம்” என்று தெரிவித்த உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை, நேற்றைய தினம், அமைச்சரிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில், அது தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பொன்று, அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளிக்க முன்வந்தார். எனினும், ஐவரடங்கிய குழுவில் இருவர், அதில் கையெழுத்திடாமை காரணமாக, அமைச்சர் அதனை ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்ததுடன், ஏனைய இருவரின் கையொப்பத்துடன் அல்லது கையொப்பமிடாமைக்கான காரணத்துடன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் கூறியதாவது,

“எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோ பீரிஸுடன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னைக் குறை கூறி, அண்மையில் அவர், லங்காதீப பத்திரிகைக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.  
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், அதாவது டிசெம்பர் மாத ஆரம்பத்தில், இந்த ஆணைக்குழு, சுயாதீனமாகச் செயற்பட, நான் அனுமதித்துள்ளதாகவும்  எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்று ஊடக சந்திப்பில் கூறிய பீரிஸ், ஒரு மாதத்துக்குள் ஏன் அவ்வாறான கருத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார் என்று தெரியவில்லை.

இதேவேளை, இன்று (நேற்று) அவர் தனது அலுவலகத்தில் வைத்து, எனக்கு அவர் மதிய உணவும் அளித்தார். அங்கு சென்றுவிட்டுதான், நான் இங்கு வந்துள்ளேன்.

ஆணைக்குழுவின் தலைரை, பிரதமர் அழைத்துப் பேசியதாக, அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது. அவ்வாறு அழைத்துப் பேசுவதில், எந்த பிழையும் இல்லை. இந்த அறிக்கை தொடர்பில், அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இது, நாட்டு மக்கள் தொடர்புடைய முக்கிய பொறுப்பாகும். எனவே, ஜனாதிபதி, பிரதமருக்கு இது தொடர்பில் முழு உரிமை உள்ளது.

நான் எனது கடமையை மறந்து எங்கோ ஒடி விட்டதாக சிலர் தெரிவித்தனர். நான் எங்கும் ஒடி ஒளியவில்லை. இன்றைய தினம் (நேற்று) அறிக்கை சமர்பிப்பதாக ஆணைக்குழு தலைவர் எனக்கு அறிவித்தார். அதனால், மக்காவுக்கு குடும்பத்துடன் யாத்திரை சென்றிருந்த நான், அங்கிருந்து உடனடியாக நாட்டுக்கு திரும்பி வந்துள்ளேன்.

நான் ஆணைக்குழுவை ஆட்டுவிப்பவன் அல்ல. முன்னர் நடைபெற்றதைப் ​போல, அறிக்கையைத் தயாரித்துவிட்டு, கையெழுத்து இடுமாறு மட்டும், ஆணைக்குழு உறுப்பினர்களை கட்டாயப்படுத்துபவன் நான் இல்லை.

ஆணைக்குழுவுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்துள்ளேன். ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளதின் அடிப்படையில் ஐவரை நியமித்தேன். அவர்களே என்னிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.

இதன்போது அசோக பீரிஸ் அங்கு வந்து அறிக்கையை கையளிக்க முற்பட்ட  போதும், அந்த அறிக்கையில் மூவர் மாத்திரம் கையெழுத்திட்டிருந்தமையால் அதனை அமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனைய இருவரும் கையெழுத்திடாமைக்கான காரணத்துடன் அறிக்கையை தன்னிடம் அளிக்குமாறு அமைச்சர் ஆணைகுழுவின் தலைவரிடம் கூறிய பின்னர்,  கருத்து தெரிவிக்கையில்.

“இந்த அறிக்கை முழுமையடையவில்லை். ஐவரில்  இருவர் கையெழுத்திடாத நிலையில், அதில் ஏதோ குறையுள்ளது என்றுதான் அர்தப்படுகின்றது. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அதனை ஏற்க முடியாது. பொதுமக்களுக்கு நான் கடமைப்பட்டவன். எனவே, அனைவரும் கையெழுத்திட்ட, அல்லது கையெழுத்திடாமைக்கான காரணம் குறிப்பிட்ட அறிக்கையுடன் என்னிடம் சமர்ப்பித்தால் ஏற்றுக்கொள்ள முடியும்.

அனைவரும் கையெழுத்திடாமல் அறிக்கையை கையளித்தால், அது தொடர்பில் சட்ட ரீதியில் ஆராய்ந்து பார்க்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அறிக்கையை ஏற்குமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. சட்டத்துக்கு அமைவாகவும் எனது அமைச்சுக்குள்ள பொறுப்பின் ​அடிப்படையிலும் நான் சுதந்திரமாக செயற்படுவேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .