2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'இலங்கையில் ISIS இல்லை’

Thipaan   / 2016 நவம்பர் 23 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமந்திரன் எம்.பியானது எப்படி
மஹிந்த- கோட்டா கைகூலிகள் சிக்கினர்
ஜனாதிபதியும் பிரதமரும் கடுங்கரிசனை
கனவு ஜெனரல் சீடையில் கத்துகிறாராம்

அழகன் கனகராஜ் 

நாட்டுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினர் விழிப்பாக இருக்கின்றனர். அரேபிய மொழியை மட்டும் பேசுகின்றவர்கள், அரேபி கற்பிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய அரசாங்கம், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் ‘இல்லையென்று தேசிய புலனாய்வுப் பிரிவு, தேசிய பாதுகாப்புப் பேரவைக்கு அறிக்கையிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.  

தேசிய புலனாய்வு அறிக்கை தொடர்பில், தன்னிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகக் கூறிய அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, பிரிவினைவாத, இனவாதச் சக்திகளே நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றன. இனவாதச் சக்திகள் தொடர்பில், ஜனாதிபதியும் பிரதமரும்  ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார். 

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துக் கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“தமிழர்கள் மரணித்தால் அவர்களை நினைவுகூர்ந்தால் பரவாயில்லை. புலிகளை நினைவுகூர முடியாது. எனினும், புலிகளை நினைவுகூரப் போவதாக சிவாஜிலிங்கம் ஆர்ப்பரிக்கிறார். கடந்தமுறை 13 பேருடன் புலிகளை நினைவுகூர்ந்த அவர், இம்முறை எத்தனை பேருடன் நினைவுகூரப்போகிறார் என்று பார்ப்போம். 

“வடக்கு மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோரை நிராகரித்துவிட்டு, கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரனை எம்.பியாக்கியுள்ளனர். இனவாதச் சிந்தனையாளர்களை நிராகரித்துள்ள மக்கள், மிதவாதக் கொள்கையுடையோரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றும் கூறினார்.  

“முன்னாள் நீதியரசரான வடமாகாண முதலமைச்சரும், இவர்களைப் போன்றே செயற்படுவதற்கு முயல்கின்றார். வடக்கு மற்றும் தெற்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் அருவருக்கத்தனவையாக இருக்கின்றன.  

இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைப் பரப்பினர் என்ற குற்றச்சாட்டில், பௌத்த அமைப்பைச் சேர்ந்த டான் பிரசாத் என்பவரையும், தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டான் பிரசாத், மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவின் நீலப்படையணியின் உறுப்பினராவார். அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சகல எதிர்ப்பு நடவடிக்கைகளின் போதும் அவரை காணலாம்” என்றார். 

இதேவேளை, “தௌஹீத் ஜமாஅம் அமைப்பின் செயலாளர்  முன்னைய ஆட்சிக்காலத்தில் கோட்டாபயவின் கையாளக செயற்பட்டதுடன் தேசியப் புலனாய்வு பிரிவுக்கு தகவல்களை வழங்குபவராவார். 

இவ்விருவரும் இணைந்தே இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர். இதேவேளை, வடக்கில் தேர்தலை நடத்தமுடியாத நிலைமையைத் தோற்றுவிப்பதற்கு ஆவா குழு முயல்கிறது. அவற்றுக்கெல்லாம் இடமளிக்கமுடியாது. இவைதொடர்பிலும் பாதுகாப்புப் பிரிவினர் கடும் அவதானத்துடன் இருக்கின்றனர்.

“நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அடிப்படைவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின்போது கவனம் செலுத்தப்பட்டது. வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவோருக்கு எதிராக, எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றும், ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.  

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி நிதியத்திலிருந்து தனது மருத்துவச் செலவுக்காக 1 கோடி ரூபாய் எவ்வாறு வழங்கப்பட்டது என தனக்குத் தெரியாது. ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைப்பது எம்.பிக்களுக்குள்ள சிறப்புரிமையாகும். ஏனைய நாடுகளிலும் இது உள்ளது. எமது நாட்டில் 1980ஆம் ஆண்டுமுதல் அரசியல்வாதிகளுக்கு இதுபோல நிதி வழங்கப்பட்டு வருகிறது. பிரபுக்கள், கலைஞர்கள் போன்றோருக்கும் இந்த நிதியத்திலிருந்து நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், எந்த அடிப்படையில் தனக்குப் பணம் வழங்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றார். 

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்திலிருந்து எம்.பிக்களுக்கு நிதி வழங்குவதற்கு அளவுகோலொன்று இல்லை என்று குறிப்பிட்ட அவர், இது எம்.பிக்களுக்கு உள்ள சிறப்புரிமையாகும் என்றும் குறிப்பிட்டார். 

“இலங்கையில் இராணுவப் புரட்சியொன்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. கடற்படைத் தளபதியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறான நிலையில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வேறு வழிகள் இன்மையால், இராணுவச் சதி தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி பிதற்றுகிறார். 

“வரவு - செலவுத் திட்டத்துடன் குழப்பியடிக்கலாம் என்று கனவுகண்டிருந்தனர். எனினும், அது பலிக்கவில்லை. இதனையடுத்தே, தான் ஒரு சீருடை அணிந்த இராணுவ ஜெனரலாக இருப்பதாக தினேஸ் கனவு கண்டுள்ளார். அந்தக் கனவையே அவர் பிதற்றுகின்றார்.  

“ரஞ்சன் விஜேவர்தன பயிற்சி பெற்றதுபோல, தினேஷ் பயிற்சி பெறலாம். அவரை சீருடையில் பார்ப்பதற்கு எனக்கும் ஆசைதான்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .