2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'உறவுகள் புதிய பிரவேசத்துக்குள் கொண்டுவரப்படும்'

Niroshini   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா தெரிவித்தார்.

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்துக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று (08) மாலை பாங்கொக் நகரில் இடம்பெற்றபோதே தாய்லாந்து பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு என்றும் தாய்லாந்து அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புகளை பாராட்டிய ஜனாதிபதி, குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரி அனர்த்தங்களின்போது இலங்கை மக்களுக்கு வழங்கிய உதவிகள் தொடர்பில் தன்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறையின் தொடர்புகளை மேலும் முற்னேற்றுவது தொடர்பில் இரு தலைவர்களும் இதன்போது விரிவாக கலந்துரையாடினர்.

பௌத்த நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் அனைத்து துறைகளையும் வலுவூட்ட முடியும் என்பதை சுட்டிக்காட்டிய தாய்லாந்துப் பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுலாத்துறையினை முன்னேற்றும் வகையில், எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளைப் பற்றி தெளிபடுத்திய ஜனாதிபதி, தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்கு தமது அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.

புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதன் மூலமும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தி, சுதந்திரமான ஜனநாயக நாடொன்றை கட்டியெழுப்புவதை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாகவும் தாய்லாந்துக்கு விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதிக்கு தமது நன்றியினைத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் எனவும்  அப்பயணத்தின்போது தாய்லாந்து நாட்டினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .