Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
தமிழீழ விடுதலைப் புலிகள், தன்னை படுகொலைச் செய்வதற்கு ஐந்து முறை முயன்றதாகவும், அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை. அந்தக் காலம் மலையேறிவிட்டது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இதுதான் நல்லச் சந்தர்ப்பமாகும். அதனைப் பயன்படுத்தவேண்டும் என்பதுடன், இனவாதங்களைத் தூண்டி, தேசிய உரைவீரர்களாக முயற்சிப்போரும் அதிகாரத்துக்கு பேராசைப்படுவோரும் சிந்திக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
‘தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றை காணும் நிமித்தம், நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றி, சிலர் தவறான அர்த்தப்படுத்தல்களுடன் பேசி வருகின்றனர். புதிய அரசியலமைப்பொன்றை இயற்றும் எமது முயற்சிகளைப் பார்த்து,
பரிகசித்து மற்றும் அவமதித்து பேசும் செயற்பாடுகளானவை, நாட்டில் மீண்டுமொரு இரத்தக் களரி இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, இனவாதிகள் கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற, தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“தங்களது காணிகளையே, வடக்கிலுள்ள மக்கள் திரும்பக் கேட்பதாகவும், காணிகள் மீளளிப்புக்கு எதிராக, தெற்கில் குரல் எழுப்புபவர்கள், யுத்தமொன்றில் தங்களது காணிகளை இழந்திருந்தால், அந்தக் காணி விடுவிப்பு எந்தளவு நியாயமானது என்பது புரியும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் மற்றும் இந்திய - இலங்கை ஒப்பந்தம், அதேபோல், சுதந்திரத்துக்கு முன்னதானதும் பின்னரானதுமான இனக்கலவரங்கள் பற்றி, நாட்டுக்கு நல்லபல அனுபவங்கள் உள்ளன.
ஏற்கெனவே, அதிகாரத்தை இழந்து, எதிர்காலத்துக்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் செயற்படுபவர்கள், தேசிய பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முயற்சிகளை குழப்புவார்களாயின், எதிர்காலத்திலும் அவர்களால் அதிகாரத்து வர இயலாமலேயே போய்விடும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது,தேசத்துரோகம் என்கின்ற அதேநேரம், தீர்வுக்கான முயற்சிகளை குழப்புவதும் எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கும் துரோகமேயாகும்.
1987ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியபோது, அப்போதைய பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச உள்ளிட்ட அமைச்சரவை, அதை எதிர்த்திருந்தது. எனினும், நாட்டில் பட்டப்பகலில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஜே.ஆர். ஜயவர்தன, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். அதன் பிரகாரமே, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டன.
எனினும், அதன்மூலம் உண்மையான தீர்வு கிடைக்கவில்லை என்று எழுப்பப்பட்ட குரல்களினால், இறுதியில் அது தேசிய பிரச்சினையாக மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்திலான பிரச்சினையாகவும் உருவெடுத்தது. யுத்தத்தின் விளைவாக, பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளதுடன், அதில் ஒரு தரப்பினர், விருப்பத்தின் பேரில் சென்றிருந்ததுடன், இன்னுமொரு தரப்பினர், தப்பிச் சென்றிருந்தனர்.
இன்றும் கூட, தென்னிந்தியாவில் இலட்சக்கணக்கான இலங்கை அகதிகள் இருக்கின்றனர். நாடு என்ற வகையில், இது எமக்கான அகௌரவமாகும். சர்வதேச மாநாடுகளில் சென்று பேசும்போது, இதை அகௌரவமாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெற்றிகரமான பிரவேசமொன்றுக்கு நாம் வந்துள்ளோம். எனினும், பண்டாரநாயக்க, டட்லி, ஜே.ஆர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற கடந்தகாலத் தலைவர்கள், அரசியல் தீர்வொன்றுக்கான முன்முயற்சியை மேற்கொண்ட போது, அக்காலப்பகுதிகளிலும் சிலர் அவற்றைக் குழப்பியதைப் போன்று, இன்றும் சிலர் எமது முயற்சிகளை குறைத்து மதிப்பீடு செய்து, குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
புதிய அரசியலமைப்பின் மூலம், நாட்டை பிளவுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பிக்குமார்கள் மத்தியில் சென்று தவறான கருத்தை பரப்புகின்றனர். பௌத்த மதத்துக்குரிய முதன்மை அந்தஸ்த்தை நீக்கப்போவதாகவும், பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதற்கும் கடந்த காலத்தில் இந்த பிரச்சினையைப் பயன்படுத்திய சில தலைவர்கள், இன்று எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வரும் எதிர்பார்ப்புடனான குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தற்போதைய அரசின் உண்மையான முயற்சிகளை, எந்தவொரு அடிப்படை ஆதாரங்களுமின்றி பொய்யான வார்த்தைகளை பயன்படுத்திக் குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் போகும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இவர்களே, பொறுப்பேற்க வேண்டியிருக்கும். பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சினையை விட்டுச் செல்வதா? அல்லது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தில் நிறைவுக்கு கொண்டுவருவதா என்பது குறித்து, சிந்திக்கவேண்டும்.
அரசியலமைப்பின் ஊடாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சகல தரப்பினருக்கும் நியாயபூர்வமானதுமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கே, நாம் செயற்பட்டு வருகிறோம்.
இவ்வாறான நிலையில், பிரச்சினைக்கு தீர்வொன்றை முன்வைப்பதற்கான அடிப்படையில் வடக்கு தலைவர்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், புதிய அரசியலமைப்பானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு முன்வைக்கப்படும் போது, அதை நிறைவேற்றிக்கொள்வதற்கு, பொதுவான அபிப்பிராயமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இன, மத, குல மற்றும் மொழி பேத ரீதியான செயற்பாடுகள், பிரச்சினையைத் தீர்க்க உதவாது. பிரச்சினை சம்பந்தமாக பேசும் போதும் தீர்வு காண்பதிலும், நேர்மையாக இருக்க வேண்டும். இன்று யுத்தம் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத போதிலும், உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
எனினும், கடந்த தசாப்தங்களில் அற்பத்தனமான தேசாபிமானிகளின் செய்பாடுகளினால் தான், நாம் பாரதூரமான யுத்தமொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிய வந்தது. எமக்கு, அரசியல் வீரர்கள் தேவையில்லை. நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்கும் வீரர்களே அவசியமாக இருக்கின்றனர்.
ஆகவே, ஏற்கனவே அதிகாரத்தை இழந்து எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் செயற்படுபவர்கள் எமது உண்மையான முயற்சிகளை குழப்புவார்களாயின், எதிர்காலத்திலும் அவர்களால் அதிகாரத்து வர இயலாமலேயே போகும். எதிர்கால வாக்குகள் மற்றும் அதிகாரத்தை எதிர்பார்த்து குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட்டமையினாலேயே கடந்த காலங்களில் யுத்தம் உருவாகியிருந்தது. ஆகவே, நாடு பிளவுபடாத மற்றும் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வொன்றுக்கு பிரவேசிக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் கவலைக்குரியதாக இருக்கின்றன. புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது நானும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தேன். 2009 ஆம் ஆண்டு ஐ.நா.வில் அவர் அதிகாரபகிர்வு பற்றி பேசியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, தீர்வொன்றை வழங்க 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் செல்லவும் தயாராக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் அவர் தெரிவித்திருந்தார்.
ஆகவே, அதிகாரத்தில் இருக்கும் போது ஒன்றையும் அதிகாரத்தில் இல்லாதபோது மீண்டும் அதிகாரத்து வரும் எதிர்பார்ப்பில் இன்னொன்றையும் கூறுவது துரதிர்ஷ்டவசமான விடயமாகும்.
ஆகவே, நிலையான சமாதானத்தையும் பிளவுபாடாத நாடொன்றையும் உருவாக்குவதற்கும் மீண்டும் யுத்தமொன்று ஏற்படாமல் இருப்பதற்கும் சகலரும் ஒன்றிணைந்து வட்ட மேசையொன்றில் கலந்துபேசி பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரப்பகிர்வு பற்றி நியாயமாக செயற்படுவதென்றால் நியாயபூர்வமான தீர்வொன்றினை வழங்க வேண்டும்.
தேசத்துரோகம் இழைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. உண்மையான தேசாபிமானி என்றால் பிரச்சினையை தீர்க்க செயற்பட வேண்டும். இந்த பிரச்சினையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டியதில்லை. இன்றே தீர்த்துவிட வேண்டும். பிரச்சினையை தீர்க்காமல் காலம் தாழ்த்துவதும் தேசத்துரோகமொன்று தான். அதேபோல், தீர்வுக்கான முயற்சிகளை குழப்புவதும் எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கும் துரோகமே.
கொழும்பில், ஊடகவியலாளர்களை கடத்தி, ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுப்போர் யாரும் வடக்குக்கு சென்று அம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண செயற்பட்டிருக்கவில்லை.
உண்மையான தகவல்களை திரிபுப்படுத்தி தவறான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யாமல் சமூகத்துக்கு உண்மையை பேசுங்கள். நாம் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிப்பதாக சிலர் பிக்குமார்களுக்கு தெரிவித்த தவறான கருத்துக்களை நான் நிராகரிக்கிறேன். இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் நட்புடனும், அச்சம், சந்தேகமின்றியும் அமைதியாகவும் ஒன்றுபட்டு வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத சூழலொன்றை உருவாக்கும் நிரந்தர வேலைத்திட்டமொன்றுக்காக நாம் ஒன்றுபட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வொன்றை வழங்கும் போது, அரசினதும் படையினரதும் காணிகளை அவர்களுக்கு வழங்குவதாக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆனால், தங்களது காணிகளையே வடக்கிலுள்ள மக்கள் திரும்ப கேட்கின்றனர்.
கடந்த ஒரு வருட காலத்துக்குள் நாம் காணிகளை திரும்ப வழங்கிய போது, தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள் தங்களது உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தனர். ஆகவே, இங்கு இவற்றுக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் இதே போன்றதொரு யுத்தத்தில் தங்களது காணிகளை இழந்திருக்கும் பட்சத்தில் தான் அந்த காணிகள் விடுவிப்பு எந்தளவு நியாயபூர்வமானது என்பது பற்றி புரியும்” என்றார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago