2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'தும்பிக்கையை பிடியாதீர் அங்குசத்தை தூக்குங்கள்'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான வேறுபாடானது, ஹிட்லரின் ஆட்சிக்கும் மண்டேலாவின் ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டினைப் போன்றது' என்று சுட்டிக்காட்டிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரே‚ யானைகளுடன் கைகோர்க்காதீர்கள், அங்குசத்தைக் கையில் எடுங்கள்' என்றும் அறைகூவல் விடுத்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது, 'ஐக்கிய தேசியக் கட்சி, தனது 70 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிய, ஆறு நாட்களுக்கு முன்னர் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தனது 65ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி குருநாகல், மாளிகாபிட்டிய மைதானத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி, கெம்பல் மைதானத்திலும் தமது கொண்டாட்டங்களைக் கொண்டாடின. இவ்விரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரமானது 76 கிலோமீற்றராகும்.

எனினும், இவ்விரண்டு கட்சிகளினது கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாடானது வானுக்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போன்றது. இவ்விரண்டு கட்சிகளின் செயற்பாடானது, ஹிட்லரின் ஆட்சிக்கும், மண்டேலாவின் ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டினைப் போன்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படுகின்ற விமர்சனங்களை விடவும், அன்று சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு செய்த விமர்சனங்கள் அதிகமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 வருட வரலாற்றில், அதிகளவிலான, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்சியாகவே திகழ்கின்றது. அதிகளவிலான பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதிகளவிலான மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை எல்லாம் மஹிந்தவின் காலத்தில்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்,

'எல்லை நிர்ணய ஆணைக்குழு, 2012ஆம் ஆண்டுதான் நியமிக்கப்பட்டது. அதன் திருத்தச்சட்டமானது, 2015 ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டது. அன்று ஓகஸ்ட் 20 ஆம் திகதி எல்லை நிர்ணயங்கள் அலுவல்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரையிலும் தேர்தல் தொடர்பிலான பகிரங்க அறிவிப்பு விடுக்கப்படவில்லை. இவ்வாறான ஓர் அரசாங்கத்தின் கீழ் செயற்படுவதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையால், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்றும்  அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .