2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'விசாரணை பக்கச்சார்பானது| இறையாண்மைக்கு இழுக்கு'

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

பக்கச்சார்பானதும் வெளிப்படைத்தன்மையற்றதுமான விசாரணையின் தீர்ப்பால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமையானது, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட மக்களின் இறையாண்மைக்குப் பங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டு, ஒருவார காலத்துக்கு நாடாளுமன்ற சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவினால், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'நான் இன்றைய (நேற்று வியாழக்கிழமை) தினத்தில் சபை அமர்வில் கலந்துகொள்ளாதிருந்த போது, எனக்கு எதிரான ஒரு வாரகால சேவைத் தடையை விதித்துள்ளீர்கள் என்பதை அறிந்துகொண்டேன். இந்தத் தீர்மானமானது, வெளிப்படைத்தன்மை அற்றது என்பதைக் கௌரவத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இச்சம்பவம் தொடர்பில், பக்கச்சார்பான முறையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த எதிரணியினரால் வழக்குத் தொடரப்பட்டுள்ள ஒருவர், இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் 72(1) என்ற நிலையியற்கட்டளையின் பிரகாரம், எம்.பி ஒருவர் தவறிழைத்திருப்பின், அவருடைய பெயர் குறிப்பிடப்பட வேண்டும். அதன் பின்னர், சபை முதல்வரினால், அந்த எம்.பியின் சேவைக்காலம் இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனையொன்று முன்வைக்கப்பட வேண்டும். அந்த யோசனை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இருப்பினும், எனக்கான சேவை இடைநிறுத்தம், மேற்படி நிலையியற்கட்டளையை மீறியுள்ளது.

பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும மற்றும் சந்தீத் சமரசிங்க எம்.பி ஆகியோர், என்மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, இந்த மோதல் சம்பவம் உருவெடுத்தது. இரு தரப்பு எம்.பி.மார்களும் இதற்கு சாட்சியாவர். இருப்பினும், என்னைத் தாக்கிய சமரசிங்க எம்.பிக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பவ தினம் எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகளைக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டே, எனக்கெதிரான இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென்பதை நான் அறிந்துகொண்டேன். இருப்பினும், இந்த விசாரணைக் குழுவில், ஒன்றிணைந்த 

எதிரணியின் உறுப்பினர் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இவ்வாறிருக்கையில், பக்கச்சார்பாகவும், வெளிப்படைத்தன்மையற்ற முறையிலும் எனக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் காரணமாக, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பஹா மாவட்ட மக்களின் இறையாண்மைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் என்னிடமும் எந்விதக் கருத்தும் கேட்கப்படவில்லை. விசாரணையும் செய்யப்படவில்லை. எனக்கு நேர்ந்த நிலைமை, இனி இந்த நாடாளுமன்றத்தில், எந்தவோர் உறுப்பினருக்கும் நேராத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X