2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

20 க்கு எதிரான மனுக்கள் மீது 6ஆம் திகதியன்று பரிசீலனை

Editorial   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, நேற்று வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுக்கள் மீதான பரிசீலனை, செப்டெம்பர் 6ஆம் திகதி இடம்பெறும் என, உயர்நீதிமன்றம், நேற்று (29) கட்டளையிட்டது.  

அத்துடன், இன்றையதினமும் மனுக்கள் தாக்கல் செய்யப்படுமாயின், அவையும், செப்டெம்பர் 6ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, கட்டளையிடப்பட்டது.  

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான அனில் குணரத்ன, விஜித் கே மலல்கொட ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், நேற்று (29) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் நேற்று (29) வரையிலும் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது. அதனை சவாலுக்கு உட்படுத்தியே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம், அரசமைப்புக்கு எதிரானது என்றும். அது தொடர்பில் விசேடமான வியாக்கியானத்தை வழங்குமாறுமே இந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளன.   

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ காமினி அபேசிங்ஹ, ஜயவர்தன யாப்பா, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் சார்பிலும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X